2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளர்? – முதல்வர் நிதிஷ் குமார் பதில்!

“2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகும் எண்ணம் இல்லை,” என, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்து உள்ளார்.

பீகார் மாநிலத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து, பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்றார். துணை முதலமைச்சராக, தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.

சுமார் 2 ஆண்டுகள் கூட்டணி அரசு தொடர்ந்த நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் மிது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, அந்தக் கட்சி உடனான கூட்டணியை, கடந்த 2017 ஆம் ஆண்டு, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் முறித்துக் கொண்டார். தொடர்ந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து, மீண்டும் மாநிலத்தில், நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார்.

தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணியுடன் வெற்றி பெற்று நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சர் ஆனார். இதற்கிடையே, பல்வேறு விவகாரங்களில் பாஜக உடன் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முரண்பாடு ஏற்பட்டது. இதை அடுத்து, அண்மையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த முதலமைச்சர் நிதிஷ் குமார், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். இது மாநில அரசியல் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் மீண்டும் கூட்டணி அமைத்து, பீகார் மாநில முதலமைச்சராக, எட்டாவது முறையாக, நிதிஷ் குமார் அண்மையில் பதவியேற்றார். துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், “2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ஆகும் எண்ணம் இல்லை என்றும், 2014 தேர்தலில் வெற்றி பெற்றவர் 2024 தேர்தலில் வெற்றி பெறுவாரா” எனக் கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு மறைமுகமாக சவால் விடுத்தார்.

இந்நிலையில் இன்று, தலைநகர் டெல்லிக்கு வந்த பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், இது பற்றி பொது மக்கள் சொன்னாலும் சரி; தனக்கு நெருக்கமானவர்கள் சொன்னாலும் சரி கவலையில்லை என்றும், எதிர்வரும் தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்றும், அனைவரும் மக்களின் பிரச்னைகள் மற்றும் சிறந்த சமூக சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி தற்போது பேசுவோம்” என்றும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.