கொழும்பு: ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் செல்லவிருந்த சீன உளவு கப்பல் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவின் அத்துமீறல் நடவடிக்கையை உலக நாடுகள் கடுமையாகக் கண்டித்து வருகிறது. தென்கிழக்கு ஆசியா மட்டுமின்றி உலகெங்கும் சீனாவின் நடவடிக்கை பதற்றத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
இதன் காரணமாகவே ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் சீனா உடனான தங்கள் உறவை முறித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
சீனா
இருந்த போதிலும், சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகள் ஓயவில்லை. சமீபத்தில் கூட அமெரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்ற போது, அத்துமீறிப் போர்ப் பயிற்சி நடத்தினர். மேலும், தைவான் வான் எல்லையிலும் ராணுவ விமானங்களை அனுப்பி இருந்தது. இந்தப் பிரச்சினை ஓய்வதற்கு முன்னரே, இலங்கைக்குத் தனது உளவு கப்பலை அனுப்பியது சீனா.
யுவான் வாங்
சீனாவுக்குச் சொந்தமான யுவான் வாங் 5 கப்பலை ஆய்வு கப்பல் என்றே சீனா தொடர்ச்சியாகச் சொல்கிறது. இருப்பினும், அந்த கப்பலால் ஏவுகணைகளைக் கண்காணிக்க முடியும். எனவே, இந்தியாவில் நடத்தப்படும் ஏவுகணை சோதனைகளைக் கண்காணித்து, இந்திய ஏவுகணைகளின் திறனைக் கண்டறிவதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
அனுமதி இல்லை
இதையடுத்து உளவு கப்பல் வருகையைக் காலவரையற்ற தாமதப்படுத்துமாறு இலங்கை கேட்டுக் கொண்டது. இருப்பினும், யுவான் வாங் 5 உளவு கப்பல் சீனா திரும்பவில்லை. இன்னும் கூட இலங்கையிலேயே சுற்றி வருகிறது. உளவு கப்பல் வர ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒர்ஜினல் திட்டப்படி இந்தக் கப்பல் கடந்த வியாழக்கிழமை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்திருக்க வேண்டும். இருப்பினும், அதிகாரிகள் இதற்கு அனுமதி அளிக்கவில்லை.
ஆகஸ்ட் 16
இருப்பினும், தீவிர ஆலோசனைக்குப் பின்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரச் சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு மறுநாள் அதாவது, ஆகஸ்ட் 16ஆம் தேதி சீன உளவு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சுமார் 600 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ளது.
எங்கும் செல்லவில்லை
யுவான் வாங் 5 கப்பல் கடந்த ஜூலை 14ஆம் தேதி சீனாவில் இருந்து கிளம்பி உள்ளது. இருப்பினும், வழியில் இதுவரை அந்தக் கப்பல் எந்த துறைமுகத்திலும் அத்தியாவசிய பொருட்களை நிரப்பச் செல்லவில்லை. இதுவே சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவின் சந்தேகத்தை உறுதி செய்யும் வகையிலேயே சீன கப்பல் எந்தத் துறைமுகத்திற்கும் செல்லாமல் சுற்றி வருகிறது.
குற்றச்சாட்டு
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே சீனா மிகப் பெரிய அளவில் உட்கட்டமைப்பில் முதலீடு செய்துள்ளது. இதனால் சீனாவிடம் இலங்கை பெரியளவில் கடன்பட்டு உள்ளது. அதேநேரம் மறுபுறம், சுதந்திரத்திற்குப் பின்னர் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்தியா தான் இலங்கைக்கு உதவி உள்ளது. இதற்கிடையே இலங்கை அரசு இந்தப் பிரச்சினையைத் தவறாகக் கையாண்டதாக அங்குள்ள எதிர்க்கட்சி கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.