காரைக்குடி: தமிழக காங்கிரஸ் தலைவராக தான் தேர்வு செய்யப்படுவதற்கு 101 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய அமைச்ச்ர ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தொடங்கும் பாதயாத்திரை அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்க உள்ளது. சுசீந்திரத்தில் இருந்து களியக்காவிளைக்கு சுமார் 65 கிலோ மீட்டர் தூரம் எனவே 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த தலைவர் யார்?
இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.
ப.சிதம்பரம் பேச்சு
காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து ப.சிதம்பரம் கூறுகையில், ஒரே மொழி, ஒரே எண்ணம் என்ற பாஜகவின் கொள்கை குறித்து காங்கிரஸ் கட்சி எச்சரித்து வருகிறது. நீட் தேர்வை எதிர்த்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியக் காரணம், மாநில நிதியில் இருந்து கட்டப்படும் கல்லூரியில் சேர்க்கப்படும் மாணவர்கள் குறித்த முடிவை எடுக்க உரிமை இல்லையா. அனைத்து முடிவையும் மத்திய அரசு எடுக்கும் என்றால், மாநில அரசுகள் பொம்மை அரசாக இருக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
மாநில உரிமை
ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு நாடு, ஒரு மொழி என்று பேசி கடைசியாக ஒரு நாடு ஒரு கட்சி, ஒரு நாடு ஒரு தலைவர் என்று செல்லும் நிலை வரும். எதற்காக மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும். சுயாட்சி கொண்ட அமைப்பாக மாநிலங்கள் இருக்க வேண்டும்.
பாஜக அரசு
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 50 லட்சம் பெண்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். அவர்கள் வேலை தேடுவதையே நிறுத்திவிட்டார்கள். 18-30 வயது இளைஞர்கள் மத்தியில் வேலை இல்லாமை 25 சதவிகிதமாக இருக்கிறது. 5 ஆயிரம் சிறு, குறு தொழில் இருந்த நகரங்களில் 500ஆக குறைந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர்?
எத்தனை லட்சம் பேர், கோடி பேர், வேலைகளை இழந்துள்ளார்கள்? இதற்கெல்லாம் முழு முதல்காரணம் நரேந்திர மோடியும், பாஜக-வும் தான். இவர்கள் தப்பிக்கவும் முடியாது. தப்பி ஓடவும் முடியாது. தமிழக காங்கிரஸ் தலைவராக நான் தேர்வு செய்யப்படுவதற்கு 101 சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அந்த முடிவை அகில இந்திய காங்கிரஸ் தான் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
https://tamil.oneindia.com/news/tamilnadu/101-chance-for-selected-as-the-tamil-nadu-congress-president-says-p-chidambaram-in-karaikudi-470691.html