அண்ணாமலையை தரக்குறைவாக பேசினார் பிடிஆர் – செருப்பு வீச்சு விவகாரத்தில் நடந்தது என்ன?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்த தர்மராஜ்-ஆண்டாள் தம்பதியின் இளைய மகன் லட்சுமணன் (வயது 22) ராணுவ வீரராக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினார். இந்தச் சூழலில் நேற்று முன்தினம் ரஜ்ஜவுரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் நடந்த மோதலில் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார்.லட்சுமணனின் உடல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின் இன்று காலை தனி விமானம் மூலம் அவரது உடல் ஹைதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டு; அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. 

ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் கலோன், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வரும்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்புகளை வீசினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த செயலில் ஈடுபட்ட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர். நிலைமை இப்படி இருக்க, செருப்பு வீசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில்,  இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி பாஜக சார்பில் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மாவட்ட பாஜக பொருளாளர் ஜி.ராஜ்குமார், மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகார் மனுவில், “மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை மாநகர் தலைவர் சரவணன் ஆகியோரை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மிகவும் மரியாதைக் குறைவாக பேசியுள்ளார்.

DMK

அங்கிருந்த அதிகாரிகளிடம், ‘அஞ்சலி செலுத்த இவர்களுக்கு (பாஜக தலைவர்களுக்கு) என்ன தகுதியுள்ளது. இவர்களை யார் விமான நிலையத்துக்குள் விட்டது’ எனக் கேட்டுள்ளார். இதனை விமான நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த பாஜகவினர் தெரிந்துகொண்டனர். இதனால் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி சென்ற அமைச்சரின் காரை நிறுத்தி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அமைச்சரின் கார் ஓட்டுநர், பாஜகவினர் மீது காரை ஏற்றுவதுபோல் சென்றுள்ளார். அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்திருந்த காவல் துறையினரும் பாஜகவினர் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

அமைச்சரின் தூண்டுதல் பேரில் திமுகவினரும், காவல் துறையினரும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாஜகவினர் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் அமைச்சர் மற்றும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.