அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு எப்போது? – துணை முதல்வர் பட்னவிஸ் சொன்ன தகவல்!

“மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு விரைவில் இலாகா ஒதுக்கீடு செய்யப்படும்,” என, அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற நிலையில், துணை முதலமைச்சராக, தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்றார்.

முதலமைச்சராக பதவியேற்று 40 நாட்கள் கடந்த நிலையில், அமைச்சரவை அமைக்கப்படாமல் இருந்தது. அமைச்சரவை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைநகர் டெல்லிக்கு சென்றிருந்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர், பாஜக மூத்தத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்தனர். தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பாஜக மேலிடம் பச்சைக்கொடி காட்டியது.

இதன்படி, அண்மையில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, பாஜக சார்பில், 9 பேர், ஏக்நாத் ஷிண்டே தரப்பில், 9 பேர் என, மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

எனினும் அமைச்சரவை பதவியேற்று சுமார் ஒரு வாரமாகியும் இதுவரை புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இது குறித்து காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று, நாக்பூர் விமான நிலையத்தில், துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்திரசேகர் பவான்குலேவுக்கு வாழ்த்துகள். இவர், கட்சி அளித்த அனைத்து பொறுப்புகளிலும் சிறப்பாக செயல்பட்டார். கட்சியின் பொறுப்புகளை படிப்படியாக பெற்றவர்.

புதிதாக அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளவர்களுக்கு விரைவில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படும். விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள பயிர் இழப்பு இழப்பீடு விரைவில் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் இழப்புகளைக் கணக்கிட்டு இழப்பீடு விரைவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.