நெல்லை மாவட்டம் வழியாக கடத்தல் தங்கத்துடன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஒருவர் காரில் வருவதாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதனால் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸாரை உஷார்படுத்திய எஸ்.பி., நாங்குநேரி டோல்கேட் பகுதியில் தீவிர சோதனைக்கு உத்தரவிட்டார். அதன்படி டோல்கேட் வழியாகச் சென்ற வாகனங்களை போலீஸார் தீவிரமாக சோதனையிட்டனர்.
அப்போது, ஒரு சொகுசு காரில் வந்த அலாவுதீன் என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. ஆனால் காரில் அவரை அழைக்க வந்த இருவர், டிரைவர் ஆகியோர் உள்ளிட்ட அனைவரின் உடைமைகளிலும் எந்தவொரு தடயமும் சிக்கவில்லை. ஆனால், அலாவுதீன் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. அதனால் அவரை வழக்கமான பாணியில் போலீஸார் விசாரித்தனர். அதில், அவர் துபாயில் இருந்து ஒரு கிலோ தங்கத்தை ஆசன வாயிலில் மறைத்து வைத்துக் கடத்தல் செய்தது தெரியவந்தது. அதை அவர் ஒப்புக் கொண்டார்.
‘அயன்’ திரைப்பட பாணியில் உடலுக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வரப்பட்டதை நாங்குநேரி போலீஸார் கண்டுபிடித்தனர். குப்பிகள் மூலம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கத்தைக் கைப்பற்றியதுடன், அலாவுதீன் வந்த காரையும் பறிமுதல் செய்தனர். அத்துடன், அலாவுதீன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸார் விசாரணை நடத்தியதில் துபாயில் இருந்து அடிக்கடி இந்த கும்பல் தங்கத்தைக் கடத்தல் செய்து வருவது தெரியவந்ததால் சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்த போலீஸார், பிடிபட்ட தங்கத்தையும் நான்கு பேரையும் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். உடலுக்குள் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தவர் நெல்லை மாவட்டத்தில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.