கொழும்பு: சர்ச்சையை ஏற்படுத்திய சீன உளவுக் கப்பலான யுவான் வாங்க்-5 வருகைக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கையில் வந்து தங்கும் இந்த உளவுக் கப்பல், இந்தியாவின் ராணுவத் தளங்களை உளவு பார்க்க முடியும் என்று இந்தியா கவலை தெரிவித்திருந்த நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
சீன ராணுவத்தின் யுவான் வாங்க்-5 என்ற நவீன உளவு போர்க் கப்பல் இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு ஆக.11-ம் தேதி வர இருந்ததாகவும், அந்தக் கப்பல் 17-ம் தேதி வரை இலங்கையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இலங்கை அரசு வட்டாரங்கள் கூறுகையில், இந்திய அரசாங்கம் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் சீனக் கப்பலின் வருகை குறித்து கவலை தெரிவித்திருந்த நிலையில், ஏன் அந்தக் கப்பலை இலங்கையில் தங்க அனுமதிக்கக் கூடாது என்பதற்கு தகுந்த காரணங்களைக் கூறவில்லை.
இதற்கிடையில், ஆக.12-ம் தேதி இலங்கைக்கு சீன வெளியுறவுத் துறை அனுப்பிய குறிப்பில், தங்களது யுவான் வாங்க்-5 கப்பல் ஆக.16-ம் தேதி இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுதத்திற்கு வர திட்டமிட்டிருப்பதாகவும், எரிபொருள் நிரப்புவதற்காக அனுமதி கோரப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.
இந்த அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு, சீனக் கப்பல் ஆக.16 முதல் 22 வரை இலங்கை துறைமுகத்தில் தங்க அனுமதிக்கப்படுவதாக சீன அரசிடம் இலங்கை சனிக்கிழமை தெரிவித்துள்ளதாக இலங்கை தூரக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்திய கடல் பகுதி அருகே சீன உளவு கப்பல் வருவது பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இந்தியா, இலங்கை அரசிடம் தனது எதிர்ப்பை தெரிவித்தது. செயற்கைகோள் கண்காணிப்புபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் கொண்ட சீன கப்பலில் இருந்து 750 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் உள்பட அணுமின் சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை உளவு பார்க்க முடியும். அதேபோல் கேரளா, ஆந்திரா கடலோர பகுதிகளையும், தென் மாநிலங்களில் உள்ள 6 முக்கிய துறைமுகங்களையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.