சென்னை: நடிகர் கமல்ஹாசன் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்காக மக்கள் முன்பு ஒரு நீண்ட நேர்காணலில் கலந்து கொண்டார்.
கமல்ஹாசன் பேட்டி என்றாலே அதில் பாலச்சந்தர் அவர்களை பற்றிய கேள்வி இருக்குமல்லவா
பாலச்சந்தர் தொடர்பான கேள்விக்கு இதுவரை வெளியே சொல்லாத புது விஷயம் ஒன்றை கமல்ஹாசன் கூறியுள்ளார்.
துணை இயக்குநர்
குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமான கமல்ஹாசன் அதன் பின்னர் எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் குழந்தையாக இருக்கும் போதே நடித்து விட்டார். இருப்பினும் இளைஞன் ஆன பிறகு அவருக்கு நடிப்பதை விட தொழில்நுட்ப கலைஞராக இருப்பதிலேயே ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. அதனால் துணை இயக்குநராகவும் துணை நடன இயக்குநராகவும் கமல் பணியாற்றி வந்தார்.

மீண்டும் நடிப்பு
அப்போது மலையாள படங்களில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் கமல்ஹாசனை பார்த்த பாலச்சந்தர் அவர்கள் அன்றிலிருந்து தன்னுடைய படங்களில் அவரை நடிக்க வைக்க ஆரம்பித்தார். எப்படி கமலஹாசனை காட்டி ரஜினிகாந்தை பாலச்சந்தர் நடிப்பை கற்றுக்க சொல்லி திட்டுவாரோ, அதேபோல கமல்ஹாசன் இவருடைய இயக்கத்தில் நடிக்க வந்த புதிதில் நாகேஷின் பெயரைச் சொல்லியே அவரைப் போல் நடி என்று திட்டுவாராம்.

அறிவுரை
கமலஹாசனுக்கோ இவரிடமிருந்து தப்பித்து எப்படியாவது இயக்குநர் ஆகி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாம். ஆனால் பாலச்சந்தரோ கமல்ஹாசனுக்கு பின்னால் அனைவரிடமும் அவரது நடிப்பை பற்றி பெருமையாக பேசி வந்தது அப்போது கமல் ஹாசனுக்கு தெரியாதாம். ஒரு நாள் ஒரு படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டு இருவரும் வெளியேறும் போது, அடுத்து என்ன செய்யப் போகிறாய் என்று பாலச்சந்தர் கேட்க உங்களை போல் இயக்குநராக விரும்புகிறேன் என்று சொல்ல கமல்ஹாசன் தோள் மேல் தட்டி உனக்கு நான் வேறு திட்டம் வைத்திருக்கிறேன். நீ இயக்குநர் எப்போது வேண்டுமானாலும் ஆகிக் கொள்ளலாம். ஆனால் இப்போது நீ நடிக்கத்தான் வேண்டும் என்று அறிவுரை கூறினாராம்.

ஆர்.சி.சக்தி வேறு அட்வைஸ்
அப்படித்தான் தான் கதாநாயகன் ஆனதாகவும் இன்னொரு பக்கம் தன்னுடைய இன்னொரு சினிமா நண்பரான ஆர்.சி. சக்தியோ பாலச்சந்தரின் பேச்சை எல்லாம் ஏன் கேட்கிறாய். நீ இயக்குநர் ஆக வேண்டும் என்று அட்வைஸ் செய்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் பிற்காலத்தில் தான் இயக்குநர் ஆனதற்கு நடிகன் கமல் ஹாசன் தான் காரணம். அந்த நடிகன்தான் படம் இயக்குவதற்கான பணத்தைப் பெற்றுத் தந்ததாக கமல் ஹாசன் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.