புதுடெல்லி,
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு 4 பதக்கம் வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி அணிவகுத்து சென்றனர். 12 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பில் 210 வீரர், வீராங்கனைகள் களம் இறங்கினர். இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என்று மொத்தம் 61 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.
இந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.
இதில் பிரதமர் மோடி கூறியதாவது ;
குடும்ப உறுப்பினர்களாக எனது இல்லத்தில் என்னைச் சந்திக்க நீங்கள் அனைவரும் நேரத்தை ஒதுக்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மற்ற இந்தியர்களைப் போலவே நானும் உங்களுடன் பேசுவதில் பெருமைப்படுகிறேன். உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.
கடந்த முறையுடன் ஒப்பிடுகையில், இம்முறை 4 புதிய விளையாட்டுகளில் வெற்றிக்கு வழி வகுத்துள்ளோம். லான் பவுல்ஸ் முதல் தடகளம் வரை செயல்திறன் இருந்தது. இதன் மூலம் புதிய விளையாட்டுகளில் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். இந்த புதிய விளையாட்டுகளில் நமது செயல்திறனை மேலும் மேம்படுத்த வேண்டும்.
நாட்டில் வெற்றிகரமாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார் .
.