புதுடெல்லி: நெல்லை மாவட்டத்தில் உள்ள அகத்தியர் மலையை தமிழகத்தின் 5வது யானைகள் காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பிரசித்தி பெற்ற அகத்தியர் மலையில், 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2,761 யானைகள் இருப்பது தெரியவந்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான இது, தமிழகத்தின் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தின் சில வனப்பகுதிகளிலும், கேரளாவின் கொல்லம், திருவனந்தபுரம், மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. இந்நிலையில், அகத்தியர் மலையை யானைகள் காப்பகமாக மாற்றப்படுவதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது டிவிட்டர் பதிவில், ‘உலக யானைகள் தினமான இன்று தமிழகத்தில் உள்ள அகத்தியர் மலையின் 1,197 சதுர கி.மீ பரப்பளவைச் மேலும் ஒரு யானைகள் காப்பகமாக நிறுவுவதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,’ என தெரிவித்துள்ளார். இது தமிழகத்தின் 5வது யானைகள் காப்பகம்.