ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 4 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 311ன்படி, நாட்டிற்கு எதிராக செயல்படும் அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள், தேச விரோத கருத்துக்களைப் பரப்பும் நபர்களையும் அரசு பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குற்றச்சாட்டு சுமத்தப்படுவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் பணி நீக்கம் செய்ய முடியும். அந்த வகையில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவனான சயீத் சலாவுதீனின் மகன் சயீத் அப்துல் முயீத், காஷ்மீரில் சிறுபான்மையினர் மக்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியதாக கைதான பரூக் அமது தர்ரின் மனைவி அசாப் உல் அர்ஜமந்த் கான் உட்பட 4 பேர் அரசு பணியிலிருந்து நேற்று நீக்கப்பட்டனர். ஏற்கனவே, இதே குற்றச்சாட்டின் கீழ், சயீத் சலாவுதீனின் 2 மகன்கள் கடந்த ஆண்டு அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
