கோலிவுட் ஸ்பைடர்: இணையவிருக்கும் ரஜினி – ஆஸ்கார் கூட்டணி; சிம்பு 2.0-வின் அடுத்தடுத்த அதிரடிகள்!

* இன்றைக்கும் முன்னணியில் இருக்கும் பல ஹீரோக்களை விடவும் அதிக பிஸியில் இருப்பவர் எஸ்.ஜே.சூர்யாதான். நாள் ஒன்றுக்கு இரண்டு கால்ஷீட்களில் நடித்து வருகிறார். அதனை முடித்துவிட்டு வீடு வரும் அவர் மீண்டும் அடுத்த நாள் மாலை எழுந்து மீண்டும் அடுத்த கால்ஷீட்டுக்குச் செல்கிறார். முன்பு சினிமாவில் அவருக்கு சில பல காதல்கள் இருந்தாலும் எதுவும் கல்யாணம் வரை செல்லவில்லை. இதற்கிடையே வீட்டில் அவருக்குத் தீவிரமாகப் பெண் பார்த்து வருகிறார்கள். அவரது வட்டாரத்திலேயே பெண் பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் கல்யாணம் செய்து கொள்வதாக எஸ்.ஜே.சூர்யாவும் உறுதியளித்து விட்டதால், அடுத்த ஆண்டுக்குள் திருமணம் நிச்சயமாம்!

ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த்

* லதா ரஜினிகாந்த் ஆசிரமம் பள்ளியை நடத்தி வருகிறார். சம்பளம் தரவில்லை என இன்னபிற பிரச்னைகள் வந்ததைத் தொடர்ந்து, இப்போது அந்தப் பள்ளியை நிர்வகிப்பதிலிருந்து விலகிவிட முடிவு செய்து விட்டாராம். எனவே அந்தப் பள்ளியை வேறொரு பள்ளியோடு இணைத்து விடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அதற்கான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன. இதற்கிடையே சௌந்தர்யாவுக்குக் குழந்தை பிறக்கும் சுப நிகழ்ச்சியும் நடக்கப் போவதால் வீட்டில் பார்த்துக் கொள்ளவும் லதா முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால், கடன் பிரச்னைகளையெல்லாம் இந்த ஆண்டிலேயே முடித்துக் கொள்ளச் சகல ஏற்பாடுகளும் நடந்து முடிந்திருக்கின்றன.

* கமலின் ‘தசாவதாரம்’ உட்படப் பல படங்களைத் தயாரித்த ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்காக இதுவரை ரஜினி ஒரு படம் கூடச் செய்து கொடுத்ததில்லை. ஆனாலும் ஆஸ்காரும் ரஜினியும் நல்ல நண்பர்களாகவே உள்ளனர். ரஜினிக்கு எப்போது ஆலோசனை தேவைப்பட்டாலும் உடனே அழைத்துக் கேட்பது ரவிச்சந்திரனைத்தான். இப்போது ரவிச்சந்திரன் சிரமத்தில் இருப்பதால் தயாரிப்பிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனாலும் அவர் ரஜினியிடம் உதவி எனக் கேட்டு நின்றதில்லை. இப்போது ரஜினியே அவருக்காக ஒரு படம் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தன் சம்பளத்தையும் பாதியாகக் குறைத்துக் கொள்ளவும் ரஜினி தயாராக இருப்பதாகவும் தகவல். இதைப்போலப் பஞ்சு அருணாச்சலம் குடும்பத்தினருக்கும் அடுத்த படத்தின் சம்பளத்தில் ஒரு பகுதியைத் தரப்போவதாகவும் பேச்சு எழுந்துள்ளது. நெடுநாள்களாக தள்ளிப்போன முடிவுகளையே இப்போது ரஜினி எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

சிவகார்த்திகேயன், அனிருத்

* முன்பு இயக்குநர் செல்வராகவன் ‘ஒயிட் எலிபென்ட்’ என்ற சினிமா கம்பெனி ஆரம்பித்தார். அதில் அவர், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, யுவன்ஷங்கர் ராஜா என மூவரும் இணைந்திருந்தனர். அதைப் போல இப்போது அனிருத், சிவகார்த்திகேயன் இருவரும் சேர்ந்து ஒரு படக் கம்பெனி ஆரம்பிக்கப் போகிறார்கள். அதன்மூலம் வருடத்திற்கு ஒரு படம் செய்யப் போகிறார்கள். கமெர்ஷியலாக இல்லாமல் நல்ல கதை அமைப்புடன் தயாரிக்கத் திட்டமிட்டு வருகின்றனர். இயக்குநர் விரும்பும் படக்குழுவையே போட்டு அவருக்கு முழு சுதந்திரம் கொடுக்கவும் தீர்மானித்து இருக்கிறார்கள். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால், தொடர்ந்து அந்த முயற்சியை மேற்கொள்ளவும் முடிவெடுத்து இருக்கிறார்கள்.

* மணிரத்னமும், சுஹாசினியும் லண்டனில் இருக்கும் மகன் நந்தனைச் சென்னைக்கு வந்து குடியேறுமாறு அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மெட்ராஸ் டாக்கீஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் சொல்லி மணி வற்புறுத்துகிறாராம். நந்தனை இங்கேயே இருக்கச் சொல்லி கமல்ஹாசன் கேட்டும், அவர் வர மறுத்து விட்டாராம். சமீபத்தில் கூட சென்னைக்கு வந்திருந்தார். அவரது ஆபீஸ் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இரண்டு நாள்தான் வீட்டில் தங்கி இருந்தாராம். சாருஹாசன் தாத்தாவும், பாட்டியும் கேட்டுக் கொண்டும் அவர் சென்னைக்கு வரவும், திருமணம் செய்து கொள்ளவும் சம்மதிக்கவில்லையாம். மணிரத்னம் எப்போதுமே மகனின் சொந்த விருப்பங்களில் தலையிடுவதும், கருத்துச் சொல்வதும் கிடையாது. அதனால் அவர்களின் உரையாடல்கள் பெரும்பாலும் ‘பொன்னியின் செல்வன்’ பற்றி மட்டுமே இருந்ததாகச் சொல்கிறார்கள்.

நந்தன் மணிரத்னம்

* ‘பத்து தல’ ஷெட்யூல் வேகம் எடுத்து விட்டது. பெல்லாரியிலும் ஒரு ஷெட்யூலை முடித்துவிட்டு வந்துவிட்டனர். அங்கே சிம்புவின் நேரம் தவறாமைப் பற்றித்தான் கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது. ஸ்பாட்டிற்குச் சரியான நேரத்திற்கு ஆஜர் ஆகியிருக்கிறார். பெல்லாரி ஷெட்யூலை முடித்துவிட்டு, உடனடியாக ‘வெந்து தணிந்த காட்டு’ படத்தின் இரண்டு நாள் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பிலும் பங்கேற்றார். சிம்புவின் இந்த வேகத்துக்குக் காரணம், அப்பாவின் அட்வைஸ் எனவும், ‘மாநாடு’ ஒரேயடியாக சிம்புவை மாற்றிவிட்டது எனவும் யூனிட்டுகளில் பேசிக் கொள்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.