நியூயார்க் நகரத்தில் ஆண்டுதோறும், கோடைக் கால சமயத்தில் இலக்கிய நிகழ்வுகள் நடைபெறும்.
இதில் ஆண்டு தோறும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர், நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி (75) கலந்துகொள்வது வழக்கம்.
அப்படி இந்திய நேரப்படி நேற்று இரவு, இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்ட சல்மான் ருஷ்டி, அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போதுதான் அடையாளம் தெரியா ஒருவர் கருப்பு நிற ஆடையுடன், முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்து வேகமாக மேடையே நோக்கி ஓடினார். கண் இமைக்கும் நேரத்தில் 20 விநாடிகளில் சல்மான் ருஷ்டியை கத்தியால் பலமுறை குத்தினார்.
இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சாய்த சம்மானை ஏர் ஆம்புலன்ஸ் மூலம், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
நேரடியாக பார்த்தவரின் தகவல்:
இந்நிலையில் இந்நிகழ்வை நேரடியாகப் பார்த்த பத்திரிகையாளர் ஒருவர், நடந்ததை விவரித்துள்ளார். அதில், “சல்மான் ருஷ்டி அமர்ந்திருந்த மேடையை நோக்கி ஒருவர் கருப்பு நிற ஆடையணிந்து, கருத்து மாஸ்க் அணிந்து வேகமாக ஓடினார். அவர் திடீரென்று சல்மான் மீது பாய்ந்தார். முதலில் இது சல்மானுக்கு இருக்கும் அச்சுறுத்தலை எடுத்துரைக்க நடத்தப்படும் ஸ்டன்ஸ் என்றுதான் நினைத்தோம்”
“ஆனால், அப்படி நடப்பதுபோல் தெரியவில்லை என எனது மனது என்னிடம் சொல்ல ஆரம்பித்த நொடியில், அந்த நபர் 10-15 முறை கத்தியால் சல்மானை குத்தினார். சல்மான் உடனே சரிந்துவிழுந்தார். அங்கிருந்த நபர்கள் உடனே சல்மானின் கால்களை உயர்த்தி பிடிக்க ஆரம்பித்தார்கள். இதன்மூலம், அவரின் இதயத்திற்கு கொஞ்சம் ரத்தம் அதிகாமக செல்லும் என்பதால் அவ்வாறு செய்தனர் என நினைக்கிறேன். சில நிமிடங்களில் ஏர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார்” எனத் தெரிவித்தார்.
3 மில்லியன் டாலர்:
1988ஆம் ஆண்டில் சல்மான் ருஷ்டி வெளியிட்ட தி சாத்தானிக் வெர்சஸ் (The Satanic verses) என்ற புத்தகத்தில், இஸ்லாமிய மதக்கடவுளின் இறைத்தூதர் மற்றும் இஸ்லாமிய மதப்புத்தக்கத்தை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி இஸ்லாமிய நாடுகள் அந்த புத்தகத்திற்கு தடை விதித்தது. 1989ஆம் ஆண்டில் சல்மான் ருஷ்டியின் தலைக்கு ஈரான் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
இதனால், அவரை கொலை செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தற்போது அவர் மீது கொலைவெறி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.