சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சண்முகவடிவேல். இவர் தற்போது, திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவராக இருக்கிறார். திருப்பத்தூர் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கும் திருப்பத்தூர் தி.மு.க மாணவரணி துணை செயலாளராக இருந்த வக்கீல் முகமது கனி என்பவருக்கும் இடையில் கடந்த 2019-ம் ஆண்டு திருமண பேனர் வைப்பது தொடர்பான தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், ஆத்திரமடைந்த சண்முகவடிவேல், தனது நண்பர் செந்தில்குமாருடன் சேர்ந்து, முகமது கனியை கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதுகுறித்து, முகமது கனி வழக்கு தொடர்ந்தார். கடந்த 2019-ல் நடைபெற்ற இந்த வழக்கானது, சிவகங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இறுதி விசாரணையில், குற்றம் உறுதிசெய்யப்பட்டதால், குற்றவாளிகள் இரண்டு பேருக்கும் தலா இரண்டு வருடம் சிறை தண்டனையும், இருவருக்கும் தலா ரூ.2,000 அபராதமும் விதித்து, நீதிபதி சுதாகர் உத்தரவிட்டார்.
மேலும், தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்கோரி குற்றவியல் நடைமுறைச் சட்டம் 389 கீழ் சண்முகவடிவேல் கால அவகாசம் கேட்டு மனு அளித்ததையடுத்து, செப்டம்பர் 5-ம் தேதிக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, 2 பேருக்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.