ஜைசல்மர்: நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், ராஜஸ்தான் உட்பட பாகிஸ்தானின் மேற்கு எல்லைப் பகுதி முழுவதும் ‘ஆப்ரேஷன் அலர்ட்’ என்ற பெயரில் தீவிர கண்காணிப்பு பணியை எல்லை பாதுகாப்பு படை தொடங்கியுள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செயலில் ஈடுபடலாம் என்பதால், நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு திசையில் பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ‘ஆப்ரேஷன் அல்ர்ட்’ என்ற நடவடிக்கையை எல்லைப் பாதுகாப்பு படை தொடங்கியுள்ளது. இந்த தீவிர கண்காணிப்பு பணி ஆகஸ்ட் 17-ம் தேதி வரை தொடரும்.
இந்த நடவடிக்கையின் போது, தீவிரவாத ஊடுருவலுக்கு சாத்தியமான இடங்கள் எல்லாம் தீவிரமாக கண்காணிக்கப்படும். தேவையான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும். பாகிஸ்தான் பகுதியிலிருந்து ட்ரோன்கள் அத்துமீறி நுழைவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இவற்றை சுட்டு வீழ்த்துவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் வாகன ரோந்துப் பணி, நடை ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எல்லை கிராமங்களில் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த ஆப்ரேஷன் அலர்ட் நடவடிக்கை ராஜஸ்தான் மண்டல எல்லை பாதுகாப்பு படை ஐஜி டேவிட் லால்ரிசங்கா மேற்பார்வையில் நடைபெறுவதாக எல்லை பாதுகாப்பு படை டிஐஜிக்கள் அசீம் வியாஸ் மற்றும் ஆனந்த் சிங் தக் ஷக் ஆகியோர் தெரிவித்தனர்.