திருவள்ளூர் மாவட்டத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் பொன்னேரி வருவாய் கோட்ட பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவின் படி இவர்களுக்கு கடந்த 1 வாரமாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் குன்னம் சேரி ஆரணி ஆற்றின் கரையோரத்தில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களில் 200க்கும் மேற்பட்டோர் கடந்த 20 வருடமாக வசித்து வருகின்றனர். இவர்களை பொதுப் பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் 21 நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்ட வந்தனர்.
அப்போது அப்பகுதியினர் ஒன்று சேர்ந்து கடந்த 20 வருடமாக இப்பகுதியில் வாழ்ந்து வருவதாகவும், திடீரென காலி செய்ய சொல்வதால் குழந்தைகளுடன் எங்கு செல்வோம் எனவும், பள்ளியில் படித்து வருகின்ற பிள்ளைகளுக்கு என்ன வழி என்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் காவல்துறையினர் பாதுகாப்புடன் அனைத்து வீடுகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதற்கிடையே மாற்று இடம் தரும் வரை நாங்கள் எங்கள் இடத்தை விட்டு காலி செய்ய மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.