சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில் இன்று பட்டப்பகலில் கொள்ளையர்கள் நுழைந்து கத்திமுனையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாடு காவல்துறை செயல் இழந்து விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை, போதைப்பொருள் விற்பனை, கடத்தல் தொடர்பான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுப்பதாக கூறி வருகிறது. காவல்துறை டிஜிபியும் சைக்கில் ஒட்டிக்கொண்டே, கஞ்சா வேட்டை 2.0, கடத்தல் வேட்டை 2.0 என படத்தின் தலைப்புபோல பல்வேறு அறிவிப்புகளை விட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஆனால், குற்றச்செயல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. பள்ளி மாணவிகள் பேருந்திலேயே மது குடிப்பதும், மது போதையில் ரோட்டில் தள்ளாடும் அவலங்களும் அரங்கேறி தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இன்று சென்னை அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் வங்கியில் நுழைந்த கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ஏராளமான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியின் தங்கநகைக் கடன் பிரிவில் இன்று (ஆகஸ்ட் 13) பிற்பகல் முகமூடி அணிந்து நுழைந்த 3 கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பல கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.
காவல்துறையின் விசாரணையில், வங்கியின் முன்னாள் ஊழியரே கொள்ளை சம்பவத்துக்கு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாடு காவல்துறை செயலிழந்துவிட்டது என்பதையே நிரூபித்து உள்ளது.