சென்னை: தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சுதந்திர தினவிழாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டுகிறார்.
தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று முதல்வரின் சிறப்பு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியை தேர்வு செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவினர் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தினர்.
அப்போது, சேலம் மாநகராட்சியின் பொறியியல் பிரிவு, வருவாய் பிரிவு, சுகாதார பிரிவு மற்றும் நகரமைப்பு போன்றவை குறித்து நேரில் ஆய்வு செய்தனர். மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நுண் உயிரி உரம் தயாரிப்பு மையம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இதையடுத்து, சிறந்த மாநகராட்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில், மிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நகராட்சியாக முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூரும், 2வது இடம் பிடித்த நகராட்சியாக குடியாத்தமும். 3வது இடம் பிடித்த தென்காசியும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி சென்னையில் நடக்கும் சுதந்திர தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது மற்றும் சிறப்பு நிதி வழங்குகிகறார். அதன்படி சேலம் மாநகராட்சி சிறப்பு நிதியாக 25 லட்சம் ரூபாயை வழங்கவுள்ளார். சிறந்த நகராட்சியாக முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 15 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த குடியாத்தத்திற்கு 10 லட்சம் ரூபாயும் மூன்றாம் இடம் பிடித்த தென்காசிக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.