சென்னை: திண்டுக்கலில் 200 ஏக்கரில் மூலிகைப் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தலைமை அலுவலகம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை புதிய வெளி நோயாளர் பிரிவு கட்டிடத்தை மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “புதிய பிளாக்கில் 32 வெளிப்புற சிகிச்சை வசதிகள், 20 மருந்து வழங்கும் கவுன்டர்கள் மற்றும் 30 ஆலோசனை அறைகள் உள்ளன. சந்திப்பு அறை, யோகா அறை, 500 இருக்கைகள் கொண்ட பல்நோக்கு அறை போன்ற கூடுதல் அம்சங்களும் உள்ளது. ஆண்டின் 365 நாட்களிலும் இந்த மருத்துவமனை செயல்படுகின்றது. இந்த மருத்துவமனையின் புற நோயாளிகள் பிளாக் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 2500 நோயாளிகள் சிகிச்சை பெறும் வசதி உள்ளது.
தமிழக அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2022-23 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் சித்த மருத்துவமுறைகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. மூலிகைப் பயிர்கள் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபடுவதை ஊக்குவிக்க பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும்.”இளஞ்சி மன்றம்” என்ற இளஞ்சிறார் மன்றம் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு மூலிகைகள், மூலிகை பயிர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் மூலிகைப் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும். ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் ஏழு சித்த ஆயுஷ் நல மையங்கள் மற்றும் ஒரு தேசிய ஊரக நலத்திட்ட சித்த பிரிவு ஆகியவற்றை எட்டு இடங்களில் மாற்றி நிறுவப்படும். டாம்ப்கால் நிறுவனத்தின் வாயிலாக புதிதாக அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்.
தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்திய மருத்துவ முறை மருந்துகளின் தரத்தினை குறைந்த செலவில் சோதனை செய்து தரும் திட்டம் செயல்படுத்தப்படும் ஆகிய அறிவிப்புகள் தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதிதுறையில் ஏற்படுத்தப்படவுள்ளது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.