(இந்தியா, இலங்கையில் இன்று (13.08.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் பரவியுள்ள வினோத எறும்புகள் உயிரினங்களைக் கொல்வதால் மக்கள் பீதியில் உள்ளதாகவும் மலை அடிவார கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயர்வதாகவும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்துகுறித்த செய்தியின்படி, கரந்தமலையைச் சுற்றி உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டுப்பட்டி, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வகை எறும்புகள் பரவின.
நாளடைவில் கரந்தமலை வனப்பகுதி முழுவதும் அவை பரவின. இப்போது கிராமப்பகுதிகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இவை கண்களை மட்டுமே பதம் பார்க்கின்றன. உடலில் ஏறுவதால் கொப்பளங்கள் ஏற்படுகின்றன. இந்த எறும்புகளால் காட்டிலுள்ள பாம்பு, முயல் போன்ற காட்டுயிர்கள் இறந்துவிட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
காட்டெருது போன்ற பெரிய காட்டுயிர்களின் கன்றுகளையும் இந்த எறும்புகள் தாக்கி அழிப்பதாகக் கூறுகின்றனர். மேலும், விவசாயிகளின் கால்நடைகளுடைய கன்றுகளையும் இவை கொல்வதாகவும் எறும்புகள் பரவியுள்ள மலையடிவார விவசாய நிலங்களில் வசிக்கும் விவசாயிகள் வீடுகளைக் காலி செய்துவிட்டு வேறு பகுதிகளுக்குக் குடி பெயர்வதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
“இது புதுவகையான எறும்பாக உள்ளது. இதுபோன்ற வகை எறும்புகளை இதுவரை நாங்களே கண்டதில்லை. இந்த வகை எறும்புகள் அசுர வேகத்தில் பரவி வருகின்றன. இவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று எங்களுக்கே தெரியவில்லை. இதனால், காட்டுயிர்கள் அழிகின்றன” என்று கரந்தமலை வனத்துறை வனவர் முத்துச்சாமி கூறியதாகவும் தினமலர் குறிப்பிட்டுளது.
- முதல் உறவில் ‘கன்னித் திரையை’ தேடும் கணவர்கள்: கொதிக்கும் பெண்கள்
- யானை-மனித எதிர்கொள்ளல்: பாதுகாப்பில் பெரிய பிரச்னையாவது ஏன்?
- சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து – பேச முடியாத நிலையில் வென்டிலேட்டரில் இருப்பதாக தகவல்
நத்தம் கால்நடை மருத்துவர் சங்கமுத்து “இப்படியொரு எறும்பு இருப்பது தெரியவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்யப்படும்” என்று கூறியதாக தினமலர் செய்தி கூறுகிறது.
இந்த எறும்புகளின் மீதான அச்சத்தில், அடிவாரத்தில் விவசாயம் செய்து வாரும் பல குடும்பங்கள் வீடுகளைக் காலி செய்து வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டதாகவும் தினமலர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருநிறுவனங்களின் வாராக்கடன் தள்ளுபடி குறித்த விவாதம் எப்போது? – காங்கிரஸ் கேள்வி
தேர்தல் இலவசங்களுக்கு எதிரான கருத்துகளுக்காக பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்துள்ள காங்கிரஸ், ‘பெருநிறுவனங்களின் வாராக்கடன் தள்ளுபடி, பெருநிறுவன வரி குறைப்பு ஆகியவை குறித்து விவாதிப்பது எப்போது?’ என்று கேள்வியெழுப்பியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, தேர்தலில் இலவசங்களை அறிவித்து, வாக்குகளை அறுவடை செய்யும் கலாசாரம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆபத்தானது என்று பிரதமர் மோதி கடந்த மாதம் தெரிவித்தார். அதோடு பல்வேறு தருணங்களில் தேர்தல் இலவசங்களுக்கு எதிராக அவர் பேசி வருகிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப் வெள்ளிக்கிழமையன்று, “கடந்த 5 ஆண்டுகளில் 9.92 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக்கடன் 7.27 லட்சம் கோடி. இந்த கடனில் 1.03 லட்சம் கோடி மீட்கப்பட்டதாக மத்திய அரசு தனது பதிலில் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 20% வரை மீட்கப்படலாம் என்றாலும், 5.8 லட்சம் கோடி வாராக்கடன் மீட்கப்படாமல் தான் இருக்கும்.
அந்த வகையில், பெருநிறுவனங்களுக்கு வங்கிகள் ‘இலவசமாக’ வழங்கியுள்ள 5.8 லட்சம் கோடி ரூபாய் குறித்து எப்போது விவாதிப்பது? பெருநிறுவன வரி குறைப்பால் 1.45 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து எப்போது விவாதிக்கலாம்?
உங்களுடைய பணக்கார நண்பர்களுக்கு வரி குறைப்பு, கடன் தள்ளுபடி போன்ற ‘இலவசங்கள்’ வழங்கப்படும்போது, ஏழை மக்களுக்குக் குறைந்த மதிப்பிலான நிதி அல்லது இதர உதவிகள் இலவசமாக வழங்கப்படக்கூடாதா?
2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், புல்லட் ரயில் இயக்கம், நாட்டின் பொருளாதார மதிப்பு 398 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும் போன்ற வாக்குறுதிகளை பிரதமர் மோதி தலைமையிலான அரசு ஏற்கெனவே அளித்திருந்தது. இந்தப் பொய் வாக்குறுதிகள் கலாசாரம் எப்போது முடிவுக்கு வரும்?” எனக் கேள்வியெழுப்பினார்.
நண்பரின் கருணைக் கொலையைத் தடுக்க நீதிமன்றத்தை நாடிய தோழி
தீவிர அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொள்வதற்கு ஸ்விட்சர்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு விசா வழங்கக்கூடாது என்று அவருடைய தோழி நீதிமன்றத்தை நாடியுள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்விட்சர்லாந்தில் மருத்துவ சிகிச்சைக்குச் செல்வதாகக் கூறி விசா பெற்றுள்ளார். ஆனால், அவர் ஸ்விட்சர்லாந்தில் தன்னை கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொள்ளவே செல்கிறார் எனக் கூறி அவருடைய தோழி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “எனது நண்பருக்கு மையால்ஜிக் என்செஃபாலோமயலிட்டிஸ் என்ற நோய் பாதிப்புள்ளது. இந்த நோய் காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அவர் படுக்கை நோயாளியாக மாறியுள்ளார். அவரால் வீட்டிற்குள் கூட சில அடிகள் மட்டுமே நடக்க முடியும். இதனால் விரக்தியில் உள்ள என் நண்பர், ஸ்விட்சர்லாந்தில் கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொள்வதற்காக பயணப்படத் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார். ஆனால், இங்கு தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்கையில் மருத்துவ சிகிச்சைக்காகச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
என் நண்பருக்கு வயதான பெற்றோர் உள்ளனர். அவர்கள் மகனின் முடிவை நினைத்து ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர். என் நண்பர் கொரோனாவுக்கு முன்பு வரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர், வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சை செலவுகளை மேற்கொள்வதில் எவ்வித பண நெருக்கடியும் இல்லை.
ஆகையால், அவர் இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்திக்கொண்டு, உடல்நிலையை முன்னேற்ற முயற்சி செய்ய வேண்டும் என்று பெற்றோர், நண்பர்கள் விரும்புகிறோம். ஆகையால், அவரது விசாவுக்கு குடியேற்று அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது எனக் கோருகிறேன்,” என்று கோரியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்