மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 22) என்ற ராணுவ வீரர் காஷ்மீரில் நேற்று முன் தினம் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் இன்று மதுரை கொண்டு வரப்பட்டது. லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திவிட்டு வந்தபோது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் திடீரென காலணிகளை வீசி பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டனர். அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து காவல் துறையினர், அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் ஐந்து பேரை கைது செய்தனர். மேலும் திமுகவினரும் மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களிலும் திமுகவினர் தங்களது எதிர்ப்பை காட்ட ஆரம்பித்திருக்கின்றனர். அந்தவகையில், செருப்புபிஞ்சிரும்அண்ணாமல என்ற ஹேஷ் டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கிவருகின்றனர். மேலும் அந்த ஹேஷ்டேக்கின் கீழ் அண்ணாமலைக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் கருத்து கூறிவருகின்றனர்.
அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில் வன்முறையையும் வன்மத்தையும் தூண்டுவிதமாக சங்கிகள் தொடர்ந்து செயல்ப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் அமைதியை குழைக்க செயல்படும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்#செருப்புபிஞ்சிரும்அண்ணாமல #GomiyumGang | #PTR | #WeStandWithPTR
— Subramanian( SUBBU ) (@CosmoSubbu) August 13, 2022
இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தரக்குறைவாக பேசினார். இதை கண்டித்து அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி சென்ற அமைச்சரின் காரை நிறுத்தி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அமைச்சரின் கார் ஓட்டுநர், பாஜகவினர் மீது காரை ஏற்றுவது போல் சென்றுள்ளார்.
அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸாரும் பாஜகவினர் மீது தடியடி நடத்தியுள்ளனர். எனவே அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் காவல் துறையில் புகாரும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.