திருச்சி மாவட்டத்தில் உறையூர் காவல் நிலையம் மாநகரின் மையப்பகுதியில் இயங்கிவருகிறது. இந்தக் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பாண்டமங்கலம், வெக்காளியம்மன் கோயில், உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில், 108 வைணவத் திருத்தலங்களுள் சோழ நாட்டு இரண்டாவது திருத்தலம் என அழைக்கப்படும் உறையூர் அழகிய மணவாளர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில் என பிரசித்தி பெற்ற பல்வேறு திருத்தலங்களும், பல்வேறு வணிக நிறுவனங்களும், விடுதிகளும், பிரபல மருத்துவமனைகளும் உறையூர் பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் எப்போதுமே பரபரப்புடன் காணப்படும் உறையூர் பகுதியில் இயங்கி வரும் குற்றப்பிரிவு காவல் நிலையம் பூட்டப்பட்டிருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து புகார் கொடுக்க சென்ற நபர் அலைபேசியில் காவல் நிலையப் பணியாளர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது ரிங்டோன் மட்டுமே எதிர் முனையில் கேட்டிருக்கின்றது.
ஆடி மாதம் என்றால் கோயில்களில் கூட்டம் அலைமோதும், அதுவும் உறையூர் பகுதியில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோயில் இருக்கின்றது. நேற்று ஆடி வெள்ளி என்பதால் முதல்வர் மனைவி துர்காவும் இங்கு வந்து தரிசனம் செய்திருக்காங்க. அதனால நேத்து எல்லோருமே ரொம்ப பிஸியா இருந்திருப்பாங்க என்று இன்று காவல் நிலையம் சென்றால் காவல் நிலைய வாசல் பூட்டப்பட்டிருக்கு.
சரி நேற்று ஆடி வெள்ளி இன்னைக்கு என்ன? அதுவும் காவல் நிலையத்திற்கு எதுக்கு லீவு? எனப் புலம்பியபடியே திரும்பியிருக்கின்றார் புகார்தாரர். இது குறித்து அறிய காவல் நிலையத்தையும் நாம் தொடர்பு கொண்டோம் அலைபேசி முதலில் எடுக்கப்படவில்லை. மீண்டும் முயற்சித்தபோது எதிர்முனையில் நாங்க என்னங்க செய்றது ரெண்டு மூனு பேர்தான் இங்க இருக்கோம் என்று அவரது பணிசுமையையும் பகிர்ந்துக்கொண்டார்.
பொதுமக்களை காக்கக்கூடிய காவல் நிலையமே அதுவும் திருட்டு வழக்குகளை கையாளும் உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலையம் பூட்டுக்குள் இருந்தது கண்டு விபரமறிந்தவர்களின் வேதனையை உணர்ந்துக்கொள்ள முடிந்தது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“