புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய அணியினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி, பாராட்டுத் தெரிவித்தார்.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலப் பதக்கங்களை வென்றது. இந்த விளையாட்டுத் தொடரில் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக, விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை வரவேற்றுப் பேசிய பிரதமர் மோடி, “காமன்வெல்த் விளையாட்டு தொடரில் இந்திய வீரர்களின் சாதனைகள் மிகுந்த பெருமிதம் அளிக்கிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் படைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டுடன், செஸ் ஒலிம்பியாட் போட்டியையும் இந்தியா முதன்முறையாக நடத்தியுள்ளது“ என்றவர், தடகள வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
“நீங்கள் அனைவரும் பர்மிங்ஹம் போட்டியில் பங்கேற்றிருந்தபோது, இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் நள்ளிரவிலும் கண் விழித்திருந்து, உங்களது ஒவ்வொரு செயல்பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தனர். போட்டி முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக, பலர் கடிகாரத்தில் அலாரம் வைத்துவிட்டுத்தான் உறங்கினர்“ என்றார்.
“பதக்க எண்ணிக்கை என்பது செயல்திறனை முழுமையாக பிரதிபலிக்காது. முந்தைய காமன்வெல்த் தொடருடன் ஒப்பிடுகையில், 4 புதிய விளையாட்டுகளில் இம்முறை வெற்றிக்கான புதிய வழிமுறையை இந்தியா கண்டறிந்துள்ளது. லான் பவுல் முதல் தடகளம் வரை, நமது வீரர்கள் அற்புதமாக விளையாடியுள்ளனர். இந்த செயல்பாடு மூலம், இதுபோன்ற புதிய விளையாட்டுக்களில் ஈடுபாடு காட்டும் சூழல், இந்தியாவில் பெருமளவு அதிகரிக்கும். முதன்முறையாக களமிறங்கிய வீரர்கள் 31 பதக்கங்களை வென்றிருப்பது, இளைஞர்களிடையே நம்பிக்கை அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது.
பதக்கம் பெற்றுத் தந்ததோடு மட்டுமின்றி, அதனைக் கொண்டாடுவதற்கும், பெருமிதம் அடைவதற்கும் வாய்ப்பு அளித்ததன் மூலம், ‘ஒன்றுபட்ட பாரதம் உன்னத பாரதம்‘ என்பதற்கு நீங்கள் வலிமையூட்டியுள்ளீர்கள். கருத்தொற்றுமை மற்றும் ஒருமித்த குறிக்கோளுடன் நீங்கள் நாட்டை பிணைத்திருப்பதும், நமது சுதந்திரப் போராட்டம் அளித்த சிறந்த வலிமைகளில் ஒன்றாகும்“ என்றும் பிரதமர் மோடி பேசினார்.
“உலகிலேயே மிகச்சிறந்த, அனைத்தையும் உள்ளடக்கிய, பன்முகத்தன்மை மற்றும் ஆற்றல்மிக்க விளையாட்டுச் சூழலை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. திறமையுள்ள யாரையும் விட்டுவிடக் கூடாது“ என்றும் பிரதமர் மோடி வீரர்களிடத்தில் வலியுறுத்தினார்.