பெங்களூரு : ”ஏ.சி.பி., யை ரத்து செய்து, லோக் ஆயுக்தாவை பலப்படுத்தும் தீர்ப்பை, கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன்,” என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு படையை ரத்து செய்த, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரிதான். இதை வரவேற்கிறேன்.
லோக் ஆயுக்தாவுக்கு எதிராக, அரசு இல்லை. உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, அரசு நடவடிக்கை எடுக்கும்.எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, சுதந்திரத்துக்காக போராடினாரா? என்ன பேசினாலும் சரிதான் என, நினைத்து வாய்க்கு வந்தபடி பேசுகிறார். சித்தராமையாவுக்கு 75 வயதாகிறது. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தும், 75 ஆண்டுகளாகிறது. இவரிடமிருந்து, நாங்கள் பாடம் கற்க வேண்டிய அவசியமில்லை.தேச பக்தி குறித்து, ஆர்.எஸ்.எஸ்.,சுக்கும், பா.ஜ.,வுக்கும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை. சிறு வயதிலிருந்தே, தேசபக்தியை கடைப்பிடிக்கிறோம்.
எங்களுக்கு யாரும் கற்றுத்தர வேண்டாம்.சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, நாடு முழுதும் வீடுதோறும் மூவர்ணம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.தனிப்பட்ட அரசியலை விட, நாடு பெரியது என்ற உணர்வு ஏற்படும். ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்துக்காக உயிரை தியாகம் செய்தவர்கள் நினைவுகூரப்படுகின்றனர்.கொப்பாலில் கோஷ்டி மோதலில், இருவர் இறந்தனர். விசாரணை நடத்திய போலீசார், இருவரை கைது செய்துள்ளனர். பா.ஜ., தொண்டர் பிரவீன் கொலை தொடர்பாக, விசாரணை நடத்த தேசிய புலனாய்வுக்குழு வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement