சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் ஃபெடரல் வங்கியின் தங்க நகை கடன் பிரிவு கிளை செயல்பட்டுவருகிறது. இங்கு பலரும் தங்களது நகைகளை அடமானம் வைத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் இன்று துப்பாக்கி முனையில் அங்கு கொள்ளை நடந்துள்ளது. ஃபெடரல் வங்கிக்கு இன்று பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்திருக்கின்றனர். வந்தவர்கள், அங்கிருந்த காவலாளி மற்றும் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டனர். இதனையடுத்து அவர்கள் வங்கியில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் பல சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்தத் துணிகர சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல் துறை கூடுதல் ஆணையர் அன்பு, துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியவர் அதே வங்கியில் பணியாற்றுபவர் என தெரியவந்தது. அவருடன் வந்த மற்றவர்கள் அவரது நண்பர்கள் எனவும் கூறப்படுகிறது. கொள்ளையடிக்கப்பபட்ட பணம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு 20 கோடி ரூபாய் இருக்கும் என இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. வங்கி கொள்ளையர்களை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பட்டப்பகலில் சென்னையில் நடைபெற்ற இந்த வங்கிக் கொள்ளை பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.