பிடிஆர் வாகனம் மீது செருப்பு வீச்சு – மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது, பாஜகவினர் செருப்பு வீசி தாக்கிய சம்பவத்திற்கு, மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீரமரணம் அடைந்தார். அவரது உடல் இன்று அவரது சொந்த ஊரான மதுரைக்கு எடுத்து வரப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்த வந்திருந்தார்.

அத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை முன்னிட்டு அங்கு பாஜகவினர் குவிந்திருந்தனர். அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திய பின்னர் தான், பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர், அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்ட போது, அவரது காரின் மீது செருப்பை வீசி அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:

மதுரை விமான நிலையத்திற்கு வெளியே தமிழக நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் சென்ற வாகனத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு காலணி வீசி அநாகரிகமாகவும், அராஜகமாகவும் நடந்து கொண்ட செயல் கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.