தமிழகத்திலிருக்கும் 151 நகராட்சிகளில் சிறந்த செயல்பாடு, நிர்வாகம் உள்ளிட்டவற்றின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர், குடியாத்தம், தென்காசி ஆகிய மூன்றும் சிறந்த நகராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. திங்கள்கிழமை சென்னையில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் 3 நகராட்சிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு நிதி, கேடயங்களை வழங்குகிறார். இந்த நிலையில், இரண்டாவது நகராட்சியாக தேர்வாகியிருக்கும் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி தன்னிறைவுப் பெற்றிருக்கிறதா..? என்ற கேள்வியோடு, அப்பகுதி மக்களைச் சந்தித்துப் பேசினோம்.
வேலூர் மாவட்டத்தில் 2 நகராட்சிகள்தான் இருக்கின்றன. ஒன்று குடியாத்தம். இன்னொன்று பேரணாம்பட்டு. இவை இரண்டையும் உள்ளடக்கியதுதான் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி. கல்விக்கண் திறந்த மேதை காமராஜரை வெற்றி பெறச்செய்து, முதலமைச்சராக அரியணையில் அமரவைத்து, அழகுப் பார்த்த தொகுதி குடியாத்தம். பெருமைக்குரிய இந்த தொகுதியில், கௌண்டன்ய ஆற்றின் குறுக்கே காமராஜர் கட்டித்தந்த பாலம், காலம் கடந்து இன்று வரை கம்பீரமாக போக்குவரத்துப் பயன்பாட்டிலிருக்கிறது.
அதேபோல, கௌண்டன்ய ஆற்றின் போடிப்பேட்டை பகுதியில் 2 பெரிய கிணறுகளை வெட்டி நீரேற்று நிலையமும் அமைத்து கொடுத்து, மக்களின் தாகம் தீர்த்திருக்கிறார் காமராஜர். ஏறக்குறைய 63 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த 2 கிணறுகளும் பயன்பாட்டிலின்றி கைவிடப்பட்டிருந்தது. சமீபத்தில்தான் அந்த 2 கிணறுகளும் மறுசீரமைப்புச் செய்யப்பட்டன.
காமராஜருக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள் இத்தொகுதியை கைவிட்டுவிட்டனர். நகராட்சியைப் பொறுத்தமட்டில் மொத்தம் 36 வார்டுகள் இருக்கின்றன. நம் சமையலறையின் முதல் விருந்தாளியான தீப்பெட்டியை, சிவகாசிக்கு அடுத்தபடியாக, குடியாத்தத்தில்தான் அதிகம் தயாரிக்கிறார்கள். வர்த்தகரீதியாக ‘குட்டி சிவகாசி’ என்று பெயரெடுத்தும் பயனில்லை.
ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி குடியாத்தம் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டிருக்கின்றன. கௌண்டன்ய ஆற்றின் இரு கரையோரமிருக்கும் நெல்லூர்பேட்டை, பாவோடும்தோப்பு, என்.எஸ்.கே.நகர், நாராயணசாமி தோப்பு, கோபாலபுரம், காமராஜர் பாலம், சுண்ணாம்பேட்டை, பச்சையம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் இடிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அவர்களில் ‘தகுதி’ அடிப்படையில் சிலருக்கு மாற்று இடம் வழங்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை. அவர்களை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று கூறி ஆட்சியாளர்கள் அப்புறப்படுத்திவிட்டனர். இந்த ‘ரணம்’ இன்னும் கொந்தளிப்பிலேயே வைத்திருக்கிறது என்கிறார்கள் குடியாத்தம் நகர மக்கள்.
குடியாத்தத்தைச் சேர்ந்த வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ்குமாரிடம் பேசினோம். ‘‘எங்கள் நகராட்சியை ‘சிறந்த’ நகராட்சியாக தமிழக அரசு தேர்வு செய்திருப்பதைப் பார்த்தால் மிகவும் நகைப்புக்குரியதாக இருக்கிறது. மிகவும் மோசமான சுகாதார நிலை, போக்குவரத்து நெரிசல்மிக்க சாலைகள், பாதாள சாக்கடை வசதியில்லாமல் கழிவுநீர் தேக்கம் என நகராட்சிக்கான தகுதியே இழந்து காணப்படுகிறது.
தெருவிளக்குக்கூட பல இடங்களில் கிடையாது. இருந்தும் பல இடங்களில் எறிவதில்லை. தோல்வியடைந்த நகராட்சியாக இருக்கிறது. பேருந்து நிலையம் வசதிப்பட அமைக்கப்படவில்லை. இப்போதுதான் இங்குள்ள மருத்துவமனையும், மாவட்ட தலைமை மருத்துவமனையாக ‘தரம்’ உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்குரிய கட்டடங்கள் இல்லை.
எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. கிராமங்களின் கூட்டமைப்பு இது. நகராட்சி என்ற வார்த்தையே குடியாத்தத்திற்கு பொருந்தாது. கொண்டசமுத்திரம் தொடங்கி நெல்லூர்பேட்டை; செருவங்கி தொடங்கி சீவூர் வரை குக்கிராமங்கள்தான் இருக்கின்றன. இவற்றின் கூட்டமைப்பாகத்தான் குடியாத்தம் நகராட்சியைப் பார்க்கிறேன். பேருந்து நிலையத்திலிருந்து ராஜவீதி எனச் சொல்லப்படும் தாலுகா அலுவலகம் வரை தெருவிளக்கு வசதியில்லை. எப்படி கூட்டிக் கழித்து பார்த்தாலும் அரசியல் ரீதியாகத்தான் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்திருக்கிறார்கள்.
தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகனின் சொந்த மாவட்டம் என்பதால் குடியாத்தம் நகராட்சியை ‘ஒரு பேச்சுக்கு’ தேர்வு செய்திருக்கிறார்கள். ஏனெனில், மாவட்டத்திலிருப்பதே 2 நகராட்சிகள்தான். பேரணாம்பட்டு நகராட்சி மூன்றாம் தர நிலையிலிருக்கிறது. சிறந்த நகராட்சியாக அறிவித்து, 10 லட்சம் ரூபாய் சிறப்பு நிதி கொடுக்கப்பட்டுவிட்டால், ஆட்சிக்காலம் முடியும் வரை குடியாத்தத்தை கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனெனில், ஆளுங்கட்சியினரைப் பொறுத்தமட்டில் தன்னிறைவு நகராட்சியாக குடியாத்தம் பார்க்கப்படுகிறது. எல்லா வசதியும் இருப்பதாக அவர்களே மனக்கோட்டை கட்டி தங்களை தாங்களாகவே புகழ்ந்து கொள்கிறார்கள். இது, குடியாத்தம் நகர மக்களை பெருந்துயரத்தில் தள்ளப் போகிறது’’ என்றார்.
இந்திய குடியரசுக் கட்சியின் வேலூர் மாவட்டத் தலைவர் தலித்குமாரிடம் பேசினோம். ‘‘குடியாத்தம் நகரம் எந்த வகையிலும் முன்னேற்றம் அடையவில்லை. அதிகளவில் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அவர்களை நிரந்தரப் பணியாளராக அமர்த்த வேண்டும். முதலில் அவர்களுக்கு மாஸ்க், கையுறை போன்ற உபகரணங்களை கொடுங்கள். அவர்களும் மனிதர்கள் தானே!
அதேபோல பட்டியலின சமூக மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளான செருவங்கி, அசோக்நகர் போன்ற பகுதிகள் கண்டு கொள்ளப்படவே இல்லை. கோழி இறைச்சிக் கழிவுகளையும் நகருக்குள் குவித்து வைப்பதால் ஆங்காங்கே துர்நாற்றம் வீசுகிறது. பொது சுகாதாரம் துளியளவும் சரியாக இல்லை. சிறந்த நகராட்சியாக தேர்வு செய்தது வருத்தமளிக்கிறது’’ என்றார்.
குடியாத்தம் நகரமன்ற தலைவர் சௌந்தர ராஜனிடம் பேசினோம். ‘‘குப்பைகள் தரம் பிரிப்பதில் குடியாத்தம் நகராட்சிக்கு நிகராக தமிழகத்தில் வேறு எந்த நகராட்சியுமே செயல்படவில்லை. மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரிக்கும் இடத்தில் தலை வாழை இலைப் போட்டே சாப்பிடலாம். அந்த அளவுக்கு செயல்பட்டிருக்கிறோம். தண்ணீர் பிரச்னையும் விரைவில் சரியாகிவிடும். ரூ.12.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பணம் வந்துவிட்டால் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
நகராட்சியிலிருக்கும் அனைத்து பைப்லைன்களும் புதுப்பிக்கப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் டெண்டர் விடும் நிலைக்கு வந்துவிட்டது. சிறந்த நகராட்சிக்கான தேர்வுக்கு நாங்கள் எந்த முயற்சியையும் நாங்கள் எடுக்கவில்லை. திருப்பூர் அதிகாரிகள் குழு வந்துதான் குடியாத்தம் நகராட்சியை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள். போக்குவரத்து நெரிசலுக்கும் விரைவாக தீர்வு காணப்படும். கௌண்டன்ய ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர் வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டுவிட்டது. சிலருக்கு வேறு இடத்தில் வீடுகள் இருந்ததால் அவர்கள் பயனாளிகளாக கருதப்படவில்லையே தவிர அதில் குறை ஏதும் நடக்கவில்லை. காமராஜர் கட்டிய பாலத்தையும் சிறப்பாக பராமரித்து வருகிறோம். சிறந்த நகராட்சியாக தேர்வு செய்ததை கொண்டாடுகிறோம். முதலமைச்சருக்கு நன்றி’’ என்றார்.