போலி ஜாதி சான்றிதழ் வைத்திருந்ததாக புகார் கூறப்பட்ட முன்னாள் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை கடற்பகுதியில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சொகுசு கப்பலில் போதைப்பொருட்களுடன் கூடிய விருந்து நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில், அப்போது மத்திய போதைப்பொருள் தடுப்பு (என்சிபி) அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே தலைமையிலான குழு அந்த கப்பலை மடக்கி அதில் இருந்த 20 பேரை கைது செய்தனர். அதில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர். பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் ஆர்யன் கானை சமீர் வான்கடே கைது செய்ததாக கூறப்பட்டது.
ஆனால், சில நாட்களுக்கு பிறகு இந்தக் காட்சிகள் அப்படியே மாறின. ஆர்யன் கானை கைது செய்வதை தவிர்க்க லட்சக்கணக்கில் சமீர் வான்கடே பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் மும்பை என்சிபி தலைமையகத்துக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் இருந்து ஆர்யன் கானை நீதிமன்றம் விடுவித்தது. மேலும், ஆர்யன் கானை கைது செய்யும் போது சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும் நீதிமன்றம் கூறியது. இதன் காரணமாக, சென்னையில் உள்ள வரி சேவை இயக்குநரத்திற்கு சமீர் வான்கடே பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இவ்வாறு அடுத்தடுத்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட சமீர் வான்கடே போலி ஜாதி சான்றிதழ் புகார் கூறப்பட்டது. அதாவது, “தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த சமீர் வான்கடேவின் தந்தை தியானேஸ்வர் முஸ்லிமாக மாறி திருமணம் செய்து கொண்டவர். அப்படி இருக்கும் போது பிறப்பால் முஸ்லிமான சமீர் வான்கடே எப்படி எஸ்.சி. ஜாதி சான்றிதழை வைத்திருக்க முடியும்” எனக் கேட்டு சிலர் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய ஜாதி ஆய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு அக்குழு இன்று தீர்ப்பு வழங்கியது. சுமார் 91 பக்கங்களைக் கொண்ட அந்த உத்தரவில், “சமீர் வான்கடேவின் தந்தை தியானேஸ்வர் இந்து மதத்தில் இருந்து மாறாமல்தான் முஸ்லிம் மதத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனவே சமீர் வான்கடே பிறப்பால் ஒரு முஸ்லிம் இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது. எனவே அவர் மீதான புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.