முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நானும் என்னுடைய கட்சியும் நீண்ட நாட்களாக எச்சரித்து வருகிறோம். ஒரே நாடு என்ற எண்ணமே தவறான எண்ணம். இது ஒரு நாடுதான், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு நாட்டிற்குள் பல மாநிலங்கள் இருகின்றன, பல மொழிகள் இருக்கின்றன, பல கலாச்சாரம் இருக்கிறது, பல வரலாறுகள் இருக்கின்றன, பல பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. நீட் தேர்வை எதிர்ப்பதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நான் ஒரு காரணத்தைத்தான் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்துகிறேன். ஒரு மாநிலம் தன்னுடைய நிதியில் இருந்து தன்னுடைய மாநில மக்களுக்காக தன்னுடைய பொறுப்பில் கல்லூரி நிறுவினால், அதில் எந்த மாணவர்களை சேர்ப்பது என்று அந்த மாநிலத்திற்கு முடிவு எடுப்பதற்கு அதிகாரம் கிடையாதா? இது என்ன வேடிக்கை? எந்த நாட்டில் இதுபோன்ற சமஸ்டி முறை நிலவுகிறது? சும்மா பொம்மை அரசாக மாநில அரசுகள் இருக்கும், மத்திய அரசுதான் எல்லா முடிவும் எடுக்கும் என்றால்… என்ன சமஸ்டி அரசு முறை? பல காரணங்கள் இருந்தாலும் இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே நீட்டை எதிர்க்கலாம்.
இப்போ ‘நீட்’ ‘கியூட்’ என எல்லா தேர்வுகளையும் ஒருங்கிணைத்து ஒரே தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு? மாநில அரசில் ஒரு உயர்கல்வி அமைச்சர் எதற்கு? உயர்கல்வி துறை எதற்கு? மத்திய அரசே மத்திய பல்கலைக்கழகங்களை நிறுவுவது போல் எல்லா கல்லூரிகளையும் மத்திய அரசுதான் நிறுவும் என்று அறிவிக்கலாமே? மாநில அரசுக்கு வேறு வேலையே கிடையாதா, மாநில அரசுகள் எல்லாம் நகராட்சிகளாக, பேரூராட்சிகளாக குறைக்கப்படுமா? இதை எல்லாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். இதனுடைய விளைவுகளை புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு நாடு ஒரே அடையாள அட்டை, ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை, ஒரு நாடு ஒரு தேர்வு, ஒரு நாடு ஒரு மொழி, ஒரு நாடு ஒரு கலாச்சாரம், ஒரு நாடு ஒரு பழக்கவழக்கம், ஒரு நாடு ஒரு உடை… இது எங்கே போய் நிற்கும் என்றால் ஒரு நாடு ஒரு கட்சி என்று வந்துவிடும். ஒரு நாடு ஒரு தலைவர் என்று வரும். இந்த விபரீதத்தை உணர்ந்து கொள்ளாமல் இருந்தால் மிகப் பெரிய தவறு. இந்த விபரீதத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். எதற்காக மொழி வாரியாக மாநிலங்கள் என்று நம்முடைய மூத்த தலைவர்கள் அன்று பிரித்தார்கள்?
அந்தந்த மாநிலத்தில் உடைய மக்கள் அவர்கள் பல பொருள்களில் சுயாட்சி பெற்ற அமைப்பாக சுயமாக சிந்தித்து சுயமாக முடிவு எடுக்கக்கூடிய அமைப்பாக மாநில அரசுகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதை எல்லாம் கெடுப்பதற்கு அழிப்பதற்குத்தான் இந்த ஒரு நாடு ஒரே… என்ற நிலைப்பாடு. நாளைக்கு உங்களை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு ஒரு நாடு ஒரே பத்திரிக்கை என்று அறிவித்துவிடுவார்கள். ஒரு நாடு ஒரு தொலைக்காட்சி என்று அறிவிப்பார்கள்” என்றார்.