யானைகள் அதிகமாக வாழும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது, மகிழ்ச்சியான செய்தி. ஆசியாவிலுள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டும் 60% உள்ளது.
ஒரு யானை தன் வாழ்நாளில் ஒரு காட்டையே உருவாக்குகிறது.. ஒரு நாளைக்கு 200 முதல் 250 கிலோ தாவர வகைகளை சாப்பிட்டு, 100 – 150 லிட்டர் தண்ணீரை குடிக்கிறது. இப்படி யானைகள் சாப்பிடும் உணவில் 10% விதைகள் இருக்கும். அதன் சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் வனத்தில் மண்ணில் விதைக்கப்படும். இப்படி ஒரு நாளில் 300 – 500 விதைகள் விதைப்பதன் மூலமாக, அதில் ஒருநாளைக்கு 100 மரங்கள் வளர்கிறது.
இப்படி ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளர காரணமாகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். யானைக்கு நினைவாற்றல் அதிகமுண்டு. பரந்த காட்டில் வழித்தடம் மாறாமல் சென்று வரும். வனத்தின் சமநிலையை காக்கும் காப்பான் யானைகள்தான்.
யானை வாழ்விடங்களில் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில், வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதை ஆக்கிரமிப்பு, வனத்தில் அமைக்கும் தண்டவாளங்கள், சாலைகள் போன்ற பல்வேறு காரணங்களால் அழிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த, ஆறு ஆண்டுகளில், 600 -க்கும் அதிகமான யானைகள் இறந்துள்ளன.
யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அரியவகை விலங்குகள் பட்டியலுக்கு வந்து விட்டது. யானைகள் அழிந்தால் காடுகள் முற்றிலும் அழியும். காடுகள் அழிந்தால் மனிதர்கள் வாழவே முடியாது. எனவே இயற்கை சமநிலையை காக்க யானையை காப்பது மிகவும் அவசியமானது.
உலக யானைகள் தினத்தையொட்டி கேரளாவில் உள்ள பெரியார் தேசிய பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியர் மலையை யானைகள் காப்பகமாக அறிவித்தார். அதன்படி, 1,197 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட அகத்தியர் மலையின் வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியுாகவும், யானைகள் பாதுகாப்புக்காக அர்பணிக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்கும் இந்த மலை, தமிழகத்தின் தென்பகுதியான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தின் சில வனப்பகுதிகளிலும், கேரளாவின் கொல்லம், திருவனந்தபுரம், மாவட்டங்கள் வரையிலும் பரந்து விரிந்துள்ளது.
2017ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இம்மலையில் 2,761 யானைகள் இருப்பது தெரியவந்தது. எனவே அகத்தியர் மலையை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நீலகிரி, நிலாம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆனை மலை ஆகிய யானைகள் காப்பகங்கள் ஏற்கனவே உள்ள நிலையில், 5ஆவது காப்பகமாக அகத்தியர்மலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது டிவிட்டர் பதிவில், ‘உலக யானைகள் தினத்தில் தமிழகத்தில் உள்ள அகத்தியர் மலையின் 1,197 சதுர கி.மீ பரப்பளவைச் மேலும் ஒரு யானைகள் காப்பகமாக நிறுவுவதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,’ என தெரிவித்துள்ளார்.
உலக யானைகள் தினத்தில் பிரதமர் நரேந்திரமோடி,
உலக யானைகள் தினத்தில், யானையைப் பாதுகாப்பதில் எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஆசிய யானைகளில் 60% இந்தியாவில் உள்ளது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். கடந்த 8 ஆண்டுகளில் யானைகள் காப்பகங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. யானைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன். என தனது டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.