ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த பிடிஆர் கார்மீது செருப்பு வீச்சு – பரபரப்பு…

மதுரை: விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த பிடிஆர் கார்மீது செருப்பு வீசப்பட்டது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தற்கொலை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் பயங்கரவாத தாக்குதலுக்கு பலியானார்.  அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்துக்கு ரூ.20லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

இந்த நிலையில், மறைந்த ராணுவ  வீரர் லட்சுமணன் உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வந்தது. விமான நிலையத்தில்  அமைச்சர் பிடிஆர் பழனிவேல்  தியாகராஜன் ராணுவ வீரர உடலுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மதுரை  கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.  அதையடுத்து பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரில் விமான நிலையத்தில் இருந்து  வெளியே வந்தபோது கார் மீது செருப்பு வீசப்பட்டது. அங்கு கூடி இருந்த பா.ஜனதா கட்சியினர் அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே பாதுகாப்பு போலீசார் காரில் வீசப்பட்ட செருப்பை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக அங்கு நின்றிருந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். கோஷமிட்டவர்களையும் அப்புறப்படுத்தினர். தி.மு.க. அமைச்சரின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.