பெய்ரூட்: மேற்கு ஆசியாவில் லெபனான் நாடு அமைந்துள்ளது. கரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்களால் அந்த நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக வங்கி கணக்குகளில் இருந்து பொதுமக்கள் பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள வங்கியில் அல்ஷேக் ஹூசைன் (40) என்பவர் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் நுழைந்தார். வங்கி ஊழியர்கள் உட்பட 10 பேரை சிறைபிடித்தார். தன் வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் ரூ.1.60 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று எச்சரித்தார்.
“பொருளாதார நெருக்கடியால் வேலையிழந்துவிட்டேன். எனது தந்தையின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. எனது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை தாருங்கள்” என்று வங்கி அதிகாரிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் வங்கி அதிகாரிகள் கைவிரித்து விட்டனர்.
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் மக்கள் வங்கி முன்பு குவிந்து, அவருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். லெபனான் போலீஸார் நேற்று வங்கிக்குள் நுழைந்து அல்ஷேக்கை கைது செய்தனர்.