சென்னை: சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகர் விருதை வென்ற சூர்யா, அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார்.
இதனிடையே சூர்யாவும் இயக்குநர் சிவாவும் ஒரு படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
தேசிய விருது நாயகன் சூர்யா
நேருக்கு நேர் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சூர்யாவின் நடிப்புக் குறித்து, ஆரம்பத்தில் ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. அதையெல்லாம் அடித்து நொறுக்கிய சூர்யா, தனது நடிப்புத் திறமையை செழுமைப்படுத்தியே வந்தார். அதன் பலனாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்த சூர்யா, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தினார்.

மீண்டும் பாலவுடன் கூட்டணி
சூர்யாவின் நடிப்புத் திறமையை முதலில் வெளிக்கொண்டு வந்தவர் இயக்குநர் பாலா தான். அவர் இயக்கிய ‘நந்தா’ படத்தில், சூர்யா சிறப்பாக நடித்து, அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். நந்தாவைத் தொடர்ந்து ‘பிதாமகன்’ திரைப்படத்தில் இணைந்த இந்த வெற்றிக் கூட்டணி, தற்போது மீண்டும் ‘வணங்கான்’ படத்தில் ஜோடி சேர்ந்துள்ளது. இப்படத்தின் சூட்டிங் கன்னியாகுமாரி பகுதியில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

வெற்றிமாறனுடன் வாடிவாசல்
தமிழ் சினிமாவில் ரொம்பவே கவனிக்கப்படக்கூடிய இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவர் தனது பெரும்பாலான படங்களில் தனுஷுடன் கூட்டணி வைத்து வந்தார். இந்நிலையில், வெற்றிமாறனும் சூர்யாவும் ‘வாடிவாசல்’ படம் மூலம் முதன்முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா படத்தின் சூட்டிங்?
வணங்கான், வாடிவாசல் படங்களில் கமிட் ஆன சூர்யா, இன்னொருபக்கம் இயக்குநர் சிவாவிடமும் கதை கேட்டு வந்தார். இப்போது அந்தப் படத்தின் சூட்டிங் பற்றி சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. வாடிவாசல் படம் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், அதற்குள் சிவாவின் படத்தில் நடித்து முடித்துவிட சூர்யா திட்டமிட்டுள்ளாராம். இந்தப் படத்தின் சூட்டிங், வரும் 21ம் பூஜையுடன் சென்னையில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.