வீடுதோறும் மூவர்ண கொடி; செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்!

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. 76-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு தங்கள் உயிர் நீத்த தியாகிகளையும், சுந்தந்திரத்திற்காக அரும்பாடு பட்டவர்களையும் நினைவுகூரும் வகையில் சனிக்கிழமை ஆகஸ்ட் 13ம் தேதி முதல் திங்கள்கிழமை ஆகஸ்ட் 15ம் தேதி வரை வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென மக்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளாா். மக்கள் அனைவரும் வீடுகளில் இரு நாட்களுக்கு கொடியேற்ற ஏதுவாக, புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன.

ஹர்கர் திரங்கா என்ற பெயரிலான இந்த இயக்கத்திற்கு மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. மக்கள் மத்தியிலும் 76-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றும் ஆா்வம் அதிகரித்துள்ளது. அதே வேளையில், தேசியக் கொடியை ஏற்றும்போது சிலவற்றைத் தவறாமல் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புதிய விதிகளின்படி, காதி துணி மட்டுமன்றி பாலிஸ்டர் துணி கொடிகளும் பயன்படுத்தப்படலாம். அத்துடன், மாலையில் கொடியை இறக்க வேண்டிய கட்டாயமில்லை. இரவிலும் தேசியக்கொடி பறக்கலாம்.

கிழிந்த அல்லது கசங்கிய தேசியக் கொடியை காட்சிப்படுத்தப்படக் கூடாது. தேசியக் கொடி எந்தவிதத்திலும் கிழியும் வகையில் காட்சிப்படுத்தப்படக் கூடாது. 

தேசியக்கொடியை தலைகீழான நிலையில் ஏற்றக்கூடாது; அதாவது காவி நிறப்பட்டை அடிப்பகுதியில் இருக்கக் கூடாது.

தேசியக் கொடிக்கு அருகில் அதைவிட உயரமாகவோ அல்லது இணையாகவோ எந்த ஒரு கொடியோ அல்லது கொடி போன்ற பொருளோ இடம்பெறக் கூடாது. தேசியக் கொடி பறக்கவிடப்படும் கம்பத்தின் உச்சியில் ஒரே சமயத்தில் மற்ற கொடி அல்லது கொடிகள் பறக்கவிடப்படக் கூடாது.

தேசியக்கொடி பறக்கும் கொடி கம்பத்திற்கு மேல் பூக்கள் அல்லது மாலைகள் அல்லது அடையாள சின்னங்கள் உள்ளிட்ட எந்தப் பொருளும் பொருத்தப்படக்கூடாது.

தேசியக் கொடியை மாலையாகவோ, பூங்கொத்தாகவோ, அழகுப்பொருளாகவோ அல்லது எந்தவகையான அலங்காரத்திற்கோ பயன்படுத்தக் கூடாது. தேசியக் கொடி தரையில் விழவோ, தண்ணீரில் மிதக்கவோ விடக்கூடாது. தேசியக் கொடியின் மாண்பைக் கருத்தில் கொண்டு, கொடிகளை ஒருபோதும் தரையில் வீசக்கூடாது. 

தேசியக் கொடியை மேசை மீது விரிப்பாகவோ, மேடை மீதோ தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது. அலங்கார ஆடையின் பகுதியாக அல்லது சீருடையாக அல்லது எந்தவொரு நபரும் இடுப்புக்கு கீழே அணியும் துணியாக தேசியக்கொடி பயன்படுத்தப்படக் கூடாது.

மெத்தைகள், கைக்குட்டைகள், நாப்கின்கள், உள்ளாடைகள் அல்லது மற்ற ஆடைகளில் அச்சிட்டோதேசியக்கொடி வடிவத்தை பயன்படுத்தக் கூடாது.

தேசியக் கொடி கிழிந்து விட்டால் அதை பொது இடங்களில் இல்லாமல் தனியே வைத்து எரிக்கவோ அல்லது புதைக்கவோ செய்யலாம். எந்தவிதத்திலும் அதற்கு அவமரியாதை செய்து விடக்கூடாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.