மயிலாடுதுறை: கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 7 வருவாய் கிராமங்களை சேர்ந்த 813 குடும்பங்களுக்கு தலா ரூ.4800 நிவாரணத் தொகை வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மயிலாடுதுறை, நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன், உரிய பயனாளிகளுக்கு இந்த நிவாரண நிதியை வழங்கினார்.
அரசு வழங்கிய உதவித் தொகையுடன் தலா 10 கிலோ அரிசி, தலா ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்,வேட்டி,சேலை ஆகிய அத்தியாவசியப் பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் மெய்யநாதன்
இது தொடர்பாக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது; ” மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொள்ளிடம் கரையோரங்களில் உள்ள 7 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட கிராமங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுக்க முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி பொது மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் இரவு, பகல்
பாராமல் செய்து கொடுத்துள்ளோம்.”
காலை -மாலை
”முதலமைச்சர் எங்களிடம் காலை, மாலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன உதவி செய்தீர்கள். எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டறிந்தார்கள். கண்ணும் கருத்துமாக பொதுமக்களை பாதுகாக்க வேண்டுமென எங்களுக்கு உத்தரவிட்டார். கொள்ளிடம் கரையோரம் பாதிக்கப்பட்ட 7 வருவாய் கிராமங்களை சார்ந்த 813 குடும்பங்களுக்கு தலா ரூ. 4800 வீதம் ரூ. 40 லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். அதன்படி, இன்று வெள்ள நிவாரண உதவித் தொகை வழங்கினோம்.”
ரூ.4800 நிவாரண உதவி
”இந்த நிவாரணத் தொகையில் வெள்ள நீரால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.1800 உடமைகளுக்கும், ரூ. 2000 பண்டம் பாத்திரங்களுக்கும், ரூ.1000 தற்காலிக முகாமில் தங்கியதற்கான உதவித்தொகை என மொத்தம் தலா ரூ.4800 நிவாரண உதவித் தொகையும், அதனுடன் தலா 10 கிலோ அரிசியும் தலா ஒரு லிட்டர் மண்ணென்னையும், வேட்டி சேலையும் வழங்கப்படுகிறது.”
வெள்ளச்சேதம்
”தொடர்ந்து வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு கணக்கெடுக்கும் பணியும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. வெள்ள நீர் வடிந்த பிறகு ஏற்பட்ட சேதாரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மிகச் சிறந்த முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.” இவ்வாறு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.