Indian Railways: வந்தே பாரத் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி!

பெரம்பூர் ICF-ல் உலக புகழ் பெற்ற ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் முதல் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் ‘ரெயில்-18’ என்ற அதிநவீன ரெயில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத் விரைவு ரெயில்’ என்று பெயரிடப்பட்டது. இந்த ரெயில் புதுடெல்லி-வாரணாசி இடையேயும், புதுடெல்லி-காத்ரா இடையேயும் இயக்கப்படுகிறது. சொகுசாகவும், விரைவாகவும் பயணிக்க வசதியாகவும் இருப்பதால் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பயணிகள் வரவேற்பு காரணமாக கூடுதலாக வந்தே பாரத் ரெயில்களை தயாரித்து வழங்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை ஐ.சி.எப்., கபுர் தலா ரெயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலி நவீன ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகளில் வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதில் சென்னை ஐ.சி.எப்-ல் மட்டும் 102 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக ஒரு வந்தே பாரத் ரெயில் தற்போது தயாராகி உள்ளது. இந்த ரெயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.  அடுத்த தலைமுறை வந்தே பாரத் விரைவு ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை ICF லிருந்து பாடி வரை வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது என ரயில்வே அமைச்சம் தெரிவித்துள்ளது.

வரும் காலங்களில் சதாப்தி, ஜன் சதாப்தி மற்றும் இன்டர்சிட்டி  ரயில்களுக்குப் பதிலாக வந்தே பாரத்  ரயில்களை இயக்க ரயில்வே தயாராகி வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். இதற்காக 27 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் சில வழித்தடங்களும் வரும் காலத்தில் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.