சீன உளவு கப்பல் இலங்கைக்கு வர அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அண்டை நாடான சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற உளவுக் கப்பலை, இலங்கை நாட்டின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க சீனா திட்டமிட்டது. விண்வெளி மற்றும் செயற்கைக்கோளை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலை இலங்கையில் நிறுத்துவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்து வந்தது.
இதற்கிடையே சீன உளவு கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியது. மேலும் திட்டமிட்டபடி சீன உளவு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்து சேரவில்லை.
இந்நிலையில் இன்று, சீனாவின் யுவான் யாங் 5 உளவுக் கப்பல் இலங்கை நாட்டின் ஹம்மாந்தோட்டை துறைமுகத்திற்கு வர, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக, இலங்கை துறைமுக நிர்வாகி நிர்மல் பி சில்வா கூறுகையில், “சீன உளவு கப்பல் ஹம்மாந்தோட்டை துறைமுகத்திற்கு வர வெளியுறவு துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என்றும், வரும் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இந்தக் கப்பல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும்” என்றும் தெரிவித்தார்.
சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வர அனுமதி மறுத்ததாக தகவல் வெளியான நிலையில், இது இந்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.