இந்தியாவின் 75-வது சுதந்திர அமுத பெருவிழாவினை முன்னிட்டு, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து நான்கு முனை சந்திப்பு வரை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று காலையில் பாதயாத்திரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி, “பொதுவுடமை கட்சிகள், சோஷலிஸ்ட் கட்சிகள் இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்கள். எனவே அவர்கள் நீண்டகாலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ், ஜனசங்கம், பா.ஜ.க சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டது கிடையாது. சுதந்திரம் பெற்றபோது பா.ஜ.க இல்லை. இன்றைக்கு அவர்களும் கொண்டாடுகிறார்கள். இருந்தாலும் மகிழ்கிறோம், வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். எல்லோருக்கும் உரியதுதான் சுதந்திரம். இதுவரை பங்கு பெறாதவர்களும் பங்கு பெறுவதுதான் சுதந்திரத்தின் வெற்றி.
ஆனால், ஒரு சின்ன விளக்கம் அவர்கள் தரவேண்டும். இவ்வளவு காலம் ஏன் அவர்கள் இதனை கொண்டாடவில்லை என இந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் கூறவேண்டும். ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில், சுதந்திரம் கிடைத்த பிறகு தேசியக்கொடியுடன் காவிக்கொடியையும் சேர்த்து ஏற்றினார்கள். அதன் பிறகு வாஜ்பாய் ஒருமுறை ஏற்றினார். இதைத்தவிர ஆண்டு ஆண்டுக்கு கொண்டாடும் பழக்கமே அவர்களுக்கு கிடையாது. ஏனெனில், சுதந்திரம் என்பதே அவர்களுடைய கருத்துக்கு விரோதமானது. நமது தேசியக்கொடியை கையில் ஏந்திச்செல்பவர்கள், அதன் பின் இருக்கும் வரலாற்றை சொல்ல தயங்குகிறார்கள்.
ஒரு அடையாளத்தை மட்டும் சுமந்து செல்வது சரியல்ல. சுதந்திரத்திற்காக யார் யார் போராடினார்கள், எவ்வாறு தியாகம் செய்தார்கள், வாழ்க்கை எவ்வாறு துறந்தார்கள், இதையெல்லாம் அவர்கள் சொல்ல வேண்டும். இதை சொல்ல மறைப்பதிலிருந்தே தெரிகிறது, அவர்களுக்கும் இந்த சுதந்திரத்திற்கும் சம்பந்தமில்லை. எது எப்படி என்றாலும், அவர்களும் சேர்ந்து சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்கிறோம். சின்னசேலம் பகுதியிலுள்ள ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு நேற்றைய தினம் தடையாக இருந்துள்ளார்கள் அந்த ஊர் மக்கள். உடனடியாக மாநில அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்றதின் பேரில், ‘சாதி மதங்களின் பெயரைச்சொல்லி பொறுப்பானவர்கள் தேசியக்கொடியை ஏற்றுவதை யாரும் தடை செய்யக்கூடாது. அப்படி யாரேனும் செய்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும்’ என தலைமைச் செயலாளர் மூலமாக ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் முதலமைச்சர். அதற்காக நான் முதலமைச்சரை பாராட்டுகிறேன்.
பாஜக-வின் தமிழக தலைவர் அண்ணாமலையின் நோக்கம்… ‘இதில் ஒரு குறை சொல்லலாமா!’ என்று ஒரு குறை சொல்லியிருக்கிறார். அதற்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தீண்டாமை என்பதும், சாதிய பாகுபாடு என்பதும்தான் சனாதனம்.
நாங்கள் சனாதானத்திற்கு எதிராக பேசினால்… பாஜக-விலிருந்து ஆளுநர் வரை சனாதனத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள்.
‘சனாதனம்’ என்பது ஒரு சம்ஸ்கிருத வார்த்தை. அதனுடைய பொருள், ‘பழமையை பாதுகாத்தல்’ என்பதாகும். ஒரு கோவில் பழமையாக இருந்தால் அதனுடைய தன்மை, பழக்கவழக்கங்கள், அடிமைத்தன்மை, உடன்கட்டை ஏறுதல், தீண்டாமை, பெண்கள் சமூகத்தில் உரிய இடம் கிடைக்காமல் இருப்பது இதுதான் சனாதனத்தின் பழைய தன்மை.
5,000 ஆண்டுக்காலமாக இருந்த இந்த சாதனத்திற்கு எதிராக… நூறாண்டு காலமாக காங்கிரஸ், பொதுவுடைமை கட்சிகள், திராவிட இயக்கங்களும் போராடி வருகின்றன. அண்ணாமலை வரலாற்றை திணிக்க பார்க்கிறார். ஏதோ… இந்த சமூக நீதிக்கு நாங்க எதிராக இருக்கிறதாகவும், அவர் ஆதரவாக இருக்கிறதாக தோற்றத்தை ஏற்பாடு செய்கிறார், அது தவறானது. இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு எல்லாம் காரணம், உங்களுடைய சனாதன தர்மம்தான். அதை நீங்கள் தர்மம் என்று சொல்கிறீர்கள், நாங்க அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சமூக ஒற்றுமை, அனைவரும் சமம் என்பதுதான் தர்மம். நிறம், மதம், பிறப்பின் பெயரால் பாகுபாடு காட்டாமல் இருப்பதுதான் தர்மம், அதைதான் நாங்கள் ஆதரிக்கிறோம். எனவே, இந்த வெற்றி எங்களுக்கே என்பதனை அண்ணாமலைக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
யாராவது பீஃப் கடை கேட்டு, அனுமதி தரமாட்டேன் என்று கூறியிருந்தால்தான் தவறு. யாரும் கேட்காத போது கடையை தர முடியாது தானே. தேஷ்வுக் மோடிக்கு எதிராக ஒரு கருத்தையும் சொல்ல மாட்டார். ஒவ்வொரு கருத்து கணிப்பிற்கு பின்னாலும் ஒரு கருத்து திணிப்பு இருக்கிறது. அதனால்தான் பெரும்பாலானோர் கருத்துக்கணிப்பை நம்புவது கிடையாது. அதேபோல, திமுக அரசு கொள்கை ரீதியான தவறு செய்தால் கண்டிப்பாக காங்கிரஸ் அதை எதிர்க்கும். இந்த ஓராண்டு கால ஆட்சிக்கு, மூச்சு விடுவதற்காவது அவகாசம் அளிக்க வேண்டும். நீங்கள் ஒப்பிட்டு பார்த்தீர்கள் என்றால், ஒரு சிறப்பான ஆட்சியை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். மத்திய அரசின் பொருளாதார பலம் வேறு, மாநில அரசின் பொருளாதார பலம் வேறு. இருந்தாலும் ஆட்சிக்கு வந்த உடனேயே பெட்ரோலுக்கு மூன்று ரூபாய்க்கு குறைத்திருக்கிறார். ஆனால், மோடி அவர்கள் கடந்த 7 வருடங்களாக குறைக்கவில்லை.
இருந்தாலும் தவறுகள் நடக்கும் இடத்தில், எங்களுடைய மாற்று கருத்துகளை நாங்கள் சொல்லத்தான் செய்கிறோம். ஆளுநரை சந்தித்த பின் பேட்டியளித்த ரஜினி சனாதானத்திற்கு ஆதரவு என சொல்லவில்லை. அவர் சொன்னது என்னவென்றால், அரசியல் பேசினோம் என்றார். ஆனால் என்ன பேசினோம் என சொல்லவில்லை.
கபாலியை மிரட்ட முடியும் என நினைக்கிறீர்களா… பாஜக மிரட்டலுக்கு மிரல்பவராக இருந்தால் அவர் கபாலியாக இருக்க முடியாது இல்லையா..! அவர் கபாலியா… அல்லது காவிக்கு பயந்துவிட்டாரா என ரஜினிதான் சொல்ல வேண்டும்.
காங்கிரஸை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்கும் பழக்கம் கிடையாது. அப்படி அறிவிப்பதென்றால் கட்சியின் தலைமை முடிவு செய்யும்” என்றார்.