அதிமுக பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து போஸ்டர்கள்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் தனித்தனியே பிரிந்துள்ளனர். இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்நிலையில் சேலம் மாநகர் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்க ஆலோசனை கூட்டத்திற்கு கலந்து கொள்ளும்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் எம்ஜிஆர் அவர்கள் அதிமுக கட்சி தொடங்கிய 1972 ஆம் ஆண்டு கட்சியின் சட்ட விதிகளை உருவாக்கி அதில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கி உள்ளார். 

இந்த உரிமையை மீட்டெடுத்து புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க இதய தெய்வம் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான கழகத்தின் மூத்த உடன்பிறப்புகளும் கழகத்தின் முன்னோடிகளும் கழக உறுப்பினர்களும் தொண்டர்களும் இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் உண்மையான விசுவாசிகளும் தொண்டர்களும் தலைவர் எம்ஜிஆர் மன்ற உறுப்பினர்களும் ஜெ ஜெயலலிதா பேரவையின் கழகத்தின் உறுப்பினர்களும் தொண்டர்களும் கழகத்தின் சட்ட விதிப்படி புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் இப்படிக்கு சேலம் மாநகர் மாவட்ட அதிமுக உறுப்பினர்கள் என்று அச்சிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் எம்ஜிஆர் ஜானகி அம்மாள் மற்றும் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படம் மட்டும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி அவர்களின் சொந்த மாவட்டத்தில் தற்பொழுது இந்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது இந்த போஸ்டரால் சேலம் மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.