75-வது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாஜக சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. அதில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக-வினர் கலந்துகொண்டனர். பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் சென்று அங்குள்ள பாரதமாதா நினைவாலயத்தில் மாலை அணிவிப்பதாக இருந்தது.
பாதயாத்திரையாகத் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்துக்கு பாஜக-வினர் சென்ற நிலையில், அங்குள்ள பாரதமாதா நினைவாலயம் பூட்டியிருந்தது. அதையடுத்து பாஜக-வினர் அங்கிருந்த காவலர்களிடம் திறக்க கூறியிருக்கிறார்கள். ஆனால், அங்கிருந்தவர்கள் வெளியிலிருந்தபடியே வழிபட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பாஜக-வினர் அங்கிருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையைச் செலுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாப்பாரப்பட்டி பகுதி காவல்துறையினர் கே.பி.ராமலிங்கம் உட்பட பாஜக-வைச் சேர்ந்த 50 பேர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். ஏற்கெனவே பாஜக நிர்வாகிகள் சிலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இன்று ராசிபுரத்தில் தனது வீட்டிலிருந்த கே.பி.ராமலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார் அவரை கைதுசெய்தனர். அவர் கைதுசெய்யப்பட்ட செய்தியறிந்து அங்கு பாஜக-வினர் கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கத்திடம் பேசினோம். “பாஜக தரப்பில் பாதயாத்திரை செல்வதற்கு காவல்துறையினரிடம் முறைப்படி அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அன்று காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபத்துக்குச் சென்றுவிட்டோம். ஆனால், அங்குள்ள பாரதமாதா ஆலயம் மூடப்பட்டிருந்தது. பாரத மாதாவுக்கு மரியாதையைச் செலுத்தப்போகின்றோம் என்று சொல்லியும் அங்கிருந்தவர்கள் பூட்டை திறக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்கள். வேண்டுமென்றே எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால்தான் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. உடைந்த பூட்டையும் நாங்கள் உடனடியாக வாங்கி கொடுத்திருக்கின்றோம். 11-ம் தேதி நடந்த சம்பவத்துக்கு இந்த திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக இன்று கைதுசெய்திருக்கிறது” என்றார்.