நாக்பூர்: இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு சுதந்திர தினம் ஆசாதி கா அம்ரித் மகா உத்சவ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசு வீடுதோறும் மூவர்ணக் கொடி என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது. அதாவது பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்போ அல்லது மொட்டை மாடியிலோ இரவு, பகல் என வித்தியாசம் பாராமல் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசியக் கொடி விற்பனை அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டம்
அதேபோல் சமூகவலைதளங்களின் முகப்பில் தேசியக் கொடியை அனைவரும் டிபியாக வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து இதுவரை தேசிய கொடியே ஏற்றப்படாத ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மோகன் பகவத் பேச்சு
தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘பாரத்: எனது பார்வை எனது செயல்’ என்ற நிகழ்ச்சியில் ராஷ்திரிய சுவயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், இந்த உலகமே முரண்பாடுகள் நிறைந்தது. ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகத்தன்மையை திறம்பட நிர்வகிப்பதால் உலகமே இந்தியாவை வியந்து பார்க்கிறது.
கற்பிக்கப்படாத வரலாறு
நமக்குச் சொல்லப்படாத அல்லது சரியாக முறையில் கற்பிக்கப்படாத பல வரலாற்று நிகழ்வுகள் இந்தியாவில் உள்ளன. உதாரணமாக, சமஸ்கிருத இலக்கணம் பிறந்த இடம் இந்தியாவில் இல்லை. ஏன் என்று நாம் எப்போதாவது கேள்வி கேட்டிருக்கிறோமா? ஏனென்றால் நாம் முதலில் நமது சொந்த ஞானத்தையும் அறிவையும் மறந்துவிட்டோம். பின்னர் நம் மண்ணை வடமேற்கு பகுதியில் இருந்து வந்த வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் கைப்பற்றப்பட்டது.
சாதிகள் பற்றி மோகன் பகவத்
அதுமட்டுமல்லாமல், நாம் தேவையில்லாமல் சாதி மற்றும் பிற ஒத்த கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். வேலைக்களுக்காக உருவாக்கப்பட்ட சாதி உள்ளிட்டவை மக்கள் இடையில் வேறுபாடுகளை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.
அனைத்து தேசிய மொழிகள்
மொழி, உடை, கலாச்சாரம் போன்றவற்றில் நமக்குள் சிறிய வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இந்த விஷயங்களில் சிக்கிக் கொள்ளாமல், ஒற்றுமையாக இருப்பதால் ஏற்படும் நன்மைகளை பார்க்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள், அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும் என் சகோதரர்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் வேண்டும் என்று தெரிவித்தார்.