கடந்த, 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நம் நாடு சுதந்திரமடைந்ததை ஒட்டி,
மஹா ஸ்வாமிகள், 1947 ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியில் தேச மக்களுக்கு விடுத்த செய்தி:
நம் பாரத நாடு விடுதலை அடைந்திருக்கும் இத்தருணத்தில் இந்த புராதன நாட்டு மக்கள்
யாவரும் ஒரே மனதுடன் ஸ்ரீ பகவானை மனமுருகித் துதிக்க வேண்டும்.நமக்கு மேன்மேலும் மனோபலத்தையும், ஆத்மிகத்துறையில் ஈடுபடச் சக்தியையும் கொடுத்தருளுமாறு
வேண்டுவோம்.அவரது அருளால் தான் நமக்குக் கிடைத்திருக்கும் இந்தச் சுதந்திரத்தை நாம் காப்பாற்றிக் கொள்ளவும், உலகின் கண்ணுள்ள எல்லா ஜீவன்களும் ஆனந்த வாழ்க்கையைப் பெற உதவி செய்யவும் முடியும்.
தர்ம சக்கரம்
பாக்கியவசமாக நம் நாட்டின் கொடியில் நடுவில் தர்ம ஸ்வரூபியான பகவானது சக்கரம் அமைக்கப் பெற்றிருப்பது போற்றத்தக்கதாகும். அதனுடன் சரித்திர பிரசித்த பெற்ற தேவானாம் பிரியன் எனும் அசோக சக்ரவர்த்தியால் வகுக்கப்பட்ட நீதிகளோடு அந்தச் சக்கரம் நம்மைச்
சம்மந்தப்படுத்துகிறது. பகவத் கீதையில் பகவானால் உபதேசிக்கப்பட்ட ஆத்மிகத் துறையில் அது நம்மை ஈடுபடச் செய்கிறது. கீதை 3வது அத்தியாயம் 16வது சுலோகத்தில், ‘ஏவம்
பிரவர்த்திதம் சக்ரம்…’ என்று பகவான் கூறியிருப்பதால் தர்மம் சக்ரத்தின் உருவத்திலேயே
பிரகாசிப்பது விளக்கமாகிறது.
மேலும் அந்த அத்தியாயம் 14, 15 ஸ்லோகங்களில் உணவிலிருந்து உடல் உண்டாகிறது என்றும், மழையிலிருந்து உணவு விளைகிறது என்றும், யாகங்கள் செய்வதால் மழை
பொழிகிறதென்றும், கர்மத்தால் யாகங்கள் செய்யப்படுகின்றனவென்றும், கர்மமானது
வேதங்களிலிருந்து பிரதிபாதிக்கப்படுவதென்றும், வேதமானது அக் ஷரா ஸ்வரூபமான
பிரம்மத்தினின்று வெளிவருவதென்றும், இக்காரணங்களை கொண்டு பிரம்மம் வேள்விகளில் அடங்கியுள்ளதாக இந்த தர்ம சக்கரமானது நமக்கு விளக்கம் கூறுகிறது.
அசோக சக்ரவர்த்தியின் உரிய நினைப்புடன் துவங்கும் இந்தச் சுதந்திரம் கடவுள் அருளால் அறம், பொருள், இன்பம், வீடு இத்தகைய அறிய பயன்களை அளிக்கட்டும்.வெகு காலமாக
சுதந்திரத்திற்காகப் பாடுபட்டுள்ளது.கடவுள் அருளாலும், மகான்களின் ஆசியாலும் மக்களின் ஒப்பற்ற தியாகத்தாலும் கிடைத்த இந்தச் சுதந்திரத்தால் நம் நாடு செழித்தோங்கி, பஞ்சம் விலகி, தேச மக்கள் சமூக சச்சரவுகள் எதுவுமின்றி, ஒற்றுமையுடன் அன்பு கொண்டு வாழ அருள் பொழிய வேண்டுமென எங்கும் நிறைந்த கடவுளைப் பிரார்த்திப்போமாக!
நம் நாடு சுதந்திரம் அடைந்ததை ஒட்டி, நாமும் சுதந்திரம் அடைய முற்பட வேண்டும். நம்மை நாம் முற்றிலும் அறிந்து கொண்டால் தான் நாம் சுதந்திரம் அடைந்தவர்களாவோம். நம் மனமோ நம் இந்தியர்களுக்கு வசப்படுவதில்லை. ஆசையையும், கோபத்தையும் நம்மால் அடக்க
முடியவில்லை. இவை இரண்டுமே நம்மை எப்போதும் துன்புறுத்தி வருகின்றன. எந்தப் பொருளை எவ்வளவு அடைந்த போதிலும், போதும் எனும் மனநிம்மதி நமக்கு ஏற்படுவதில்லை. உலகம் துயரம் நம்மை விட்டபாடில்லை. துயரத்தைக் கண்டு மனமும் கலங்கத்தான் செய்கிறது. இதிலிருந்து கரையேற வழியென்ன?
நம் மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தீவிரமாக வேலை செய்துக் கொண்டிருந்த இந்த மனசை தன்னுள் அடக்கச் சிறிது சிறிதாகவே முயற்சிக்க வேண்டும்.
மனம் அடங்கி விட்டால், நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அது தான் நாம் பெற
வேண்டிய பூர்ண சுதந்திரமாகும்.
ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனசை சாந்தமாக வைத்து, வேறு நினைவுகளை மனதில் செலுத்தாமல், கடவுளது தியானத்தில் அமர வேண்டும். வேறு நினைவுகள் இல்லாமல் தியானம் செய்வதால் நாளடைவில் புத்தியானது தெளிவடையும். ஆசையையும், கோபத்தையும்
அடக்குவதற்கு இது ஓர் சாதனம். இவ்வித சாதனையைப் படிப்படியாக மேற்கொண்டவனுக்கு சீக்கிரமாக ஆத்ம ஞானம் உண்டாகும். குறைவில்லாத ஞானத்தைப் பெறுபவன் தான் உண்மையான சுதந்திரவனாகிறான்.
சம அன்பு
பிற ஸ்திரீகளை தாயார்களாக மதிக்க வேண்டும். பிற உயிரை தன் உயிர் போல மதிக்க வேண்டும். உயிர் போவதாய் இருந்தாலும், உண்மையே பேச வேண்டும். சமூக சச்சரவுகள் செய்வதை அறவே ஒழிக்க வேண்டும். ஒவ்வொருவனும் தன் அறிவு வளர்ச்சிக்கும், ஆத்ம
முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். எல்லாரிடமும் சம அன்பு கொண்டு ஒழுக வேண்டும். மக்கள் எல்லாம் சுகமாக வாழ வேண்டுமென ஒவ்வொருவனும் நினைக்க வேண்டும்.
தர்மோ ரக் ஷதி ரக் ஷிதஹா!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement