சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் இலங்கை வர இந்தியா கவலை தெரிவித்திருந்த நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இலங்கை வெளியுறவுத்துறை நேற்று அனுமதி அளித்துள்ளது.
சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் ‘யுவான் வாங் 5’ ஆகஸ்ட் 16 முதல் ஒரு வாரத்திற்கு இலங்கை தெற்கு கடற்கரையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அந்நாட்டு அரசு நேற்று (ஆகஸ்ட் 13) அனுமதி அளித்துள்ளது. முன்னதாக சீன கப்பல் வருகைக்கு இந்தியா கவலை தெரிவித்திருந்த நிலையில், இலங்கை அரசு கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் கேட்டிருந்தது. இருப்பினும் அந்த கப்பல் ஆகஸ்ட் 16 இலங்கை வர உள்ளது.
யுவான் வாங் 5 கப்பல்
யுவான் வாங் 5 சீனாவின் ஜியாங்னான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. 2007 செப்டம்பர் முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 222 மீட்டர் நீளமும் 25.2 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது.
செயற்கைக்கோள், ராக்கெட், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, கடல்கடந்த வான்வெளி கண்காணிப்பு ஆகியவற்றை கண்காணிக்க சீனா யுவான் வாங் வகைக் கப்பல்களைப் பயன்படுத்துகிறது. பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் முழுவதும் கண்காணிக்கும் அதி நவீன தொழில்நுட்ப திறன் கொண்டது.
ஹம்பாந்தோட்டை வருகை
சீனாவில் யுவான் வாங் 5 கப்பலை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி எடுத்து செல்வதற்கான அனுமதியை ஜூலை 12 அன்று இலங்கை அரசு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது அப்போதைய கோத்தபய அரசு இதற்கான அனுமதியை வழங்கியது. ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 17 வரை யுவான் வாங் 5 கப்பல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்தது.
இதையடுத்து இந்த கப்பல் வருகைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கிழக்கே 600 மைல் தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டது. சீனா இலங்கையின் கோரிக்கையை ஏற்காத நிலையில் ஒரு வார தாமத்திற்கு பிறகு ஆகஸ்ட் 16 கப்பல் இலங்கை வருகிறது.
யுவான் வாங் 5 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் சீனாவின் செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளது என இலங்கையின் BRISL இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே சீனாவிடம் இருந்து பெற்ற பணத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிறுவியது. பின்னர் சீனாவிடம் இருந்து பெற்ற 1.1 பில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்த முடியாதநிலையில், அப்போது அதிபராக இருந்த மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அரசு சீன நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கி ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
யுவான் வாங் 5 ஒரு சக்திவாய்ந்த கண்காணிப்பு கப்பலாகும். இந்த கப்பல் இலங்கை வருகை செய்தியை அடுத்து இந்தியா கவலை தெரிவித்தது. இலங்கை அரசை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, கடந்த அரசாங்கத்தால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக இந்தியாவிடம் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டைக்கு சீன கப்பல் வருவதற்கான அனுமதி ஜூலை 12 அன்று வழங்கப்பட்டது. அப்போது, இலங்கை அரசு முற்றிலும் சீர்குலைந்திருந்தது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தலைமறைவாகி, நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி மேற்கொண்டு வந்தார். தற்போது இந்த கப்பல் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இலங்கையின் கோரிக்கையை சீனா ஏற்க மறுத்தது. யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை வருகை தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திராவில் உள்ளிட்ட துறைமுகங்களை கண்காணிக்க கூடும். உளவு பார்க்கப்படும் அபாயம் இருப்பதாக இந்தியா தெரிவித்தது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், “இந்தக் கப்பல் ஆகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டைக்கு வரும் செய்திகளை நாங்கள் அறிந்தோம். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு செயலையும் இந்தியா அனுமதிக்காது. அரசு உன்னிப்பாக கண்காணிக்கும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.
இதற்கு சீன வெளியுறவு அமைச்சகம் பதலளித்துள்ளது. இந்தியாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என சில நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது முற்றிலும் நியாயமற்றது என்று தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 16 சீனாவின் உளவுக் கப்பல் ஹம்பாந்தோட்டை வருவதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களில் பாதுகாப்பு பணிகளும், தொழில்நுட்ப அம்சங்களும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.