திருப்பதி: நமது தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்டு, அதனை ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் ஆங்கிலத்தில் ‘மார்னிங் சாங் ஆஃப் இந்தியா’ என மொழி பெயர்க்கப்பட்டு, அவர் மூலமாகவே பாடப்பட்டு 104 ஆண்டுகள் ஆகின்றன.
‘விஸ்வ கவி’ என மக்களால் போற்றப்படும் ரவீந்திரநாத் தாகூரால் நமது தேசிய கீதம் வங்க மொழியில் இயற்றப்பட்டது. நம் நாட்டின் கலாச்சாரம், பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் இருப்பதால், இந்த பாடல் கடந்த24.1.50-ம் ஆண்டில் நமது தேசிய கீதமாக, இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் இதுகுறித்து 26.1.1950-ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு பின்னணியில் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனபள்ளி ஒரு குளிர் பிரதேசமாகும். இவ்விடத்தில் டாக்டர் அன்னி பெசண்ட் அம்மையார் கடந்த 1915-ல் பி.டி. கல்லூரியை நிறுவி நடத்தி வந்தார். அப்போது 1919-ம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த சமயத்தில் பெங்களூரு வந்திருந்த ரவீந்திரநாத் தாகூரை, தனது பி.டி.கல்லூரிக்கும் வருமாறு அன்னிபெசண்ட் அம்மையார் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று ரவீந்திரநாத் தாகூர் கடந்த 25.2.1919 முதல் 2.3.1919 வரை பி.டி. கல்லூரியிலேயே தங்கி இருந்தார்.
அப்போது, வங்க மொழியில் தான் எழுதியிருந்த ‘ஜன கன மன’பாடலை 28.2.1919-ம் தேதியன்று, ‘தி மார்னிங் சாங் ஆஃப் இந்தியா’ எனும் தலைப்பில் தன் கைப்பட ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதனை அன்னி பெசண்ட் அம்மையாருக்கும் காண்பித்தார். இது மிகவும் நன்றாக இருப்பதாகவும், தேசிய ஒருமைப்பாட்டை விளக்குவதாக இருப்பதாகவும் கூறி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் அம்மையார்.
அதன் பின்னர் அன்றைய தினமே, ‘ஜன கன மன’ எனும் வங்க மொழி பாடலை இந்த கல்லூரியின் முதல்வராக இருந்த ஜேம்ஸ். எச். கசின்ஸும் மிகவும் பாராட்டினார். பின்னர் இதே கல்லூரியில் சங்கீத ஆசிரியாக பணியாற்றிய ஜேம்ஸ்.எச். கசின்ஸின் மனைவி மார்கரெட் கசின்ஸ் இதற்கு மெட்டு அமைத்தார். அதன் பின்னர் இக்கல்லூரியில் மாணவர்கள் இந்த பாடலை முதன் முதலில் பாடினர். இதில் ரவீந்திர நாத் தாகூரும் கலந்து கொண்டு தேச பக்தி பாடலாக இப்பாடலை பாடினார்.
அதன் பின்னர் இப்பாடல், 1950-ல் நம்முடைய தேசிய கீதமாக அங்கீகாரம் பெற்றது. ஆனால் 1919-ம் ஆண்டு முதல் இன்று வரை மதனபள்ளி பி.டி. கல்லூரியில் இப்பாடலை தினமும் அப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்பாடலுக்கு 104 ஆண்டுகள் ஆனதையொட்டி, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை கொண்டாடினர். ரவீந்திர நாத் தாகூர் வசித்த அந்த அறை, புதுப்பிக்கப்பட்டது. மேலும் அவர் தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இடத்தில் 90 கிலோ எடையில் தாகூரின் பளிங்கு உருவச் சிலை நிறுவப்பட்டது.