மும்பை : நடிகை காஜல் அகர்வால் பழனி என்ற தமிழ்ப்படம் மூலம் அறிமுகமாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றார்.
தொடர்ந்து விஜய், சூர்யா, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவர் நடித்து ரசிகர்களையும் கவர்ந்தார்.
இவருக்கு திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்தநிலையில் இந்தியன் 2 படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
நடிகை காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, இந்தியில் சிறப்பான முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தமிழில் பழனி என்ற படத்தில் பரத்துடன் இணைந்து நடித்தார். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை படம் பெற்றுத் தந்தது.

முன்னணி நடிகர்களுடன் காஜல்
இதையடுத்து விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். விஜய்யுடன் மட்டுமே மெர்சல் உள்ளிட்ட 3 படங்களில் இவர் நடித்துள்ளார். இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பாக பார்க்கப்பட்டது. கொஞ்சலான மொழியுடன் கண்களை உருட்டி இவர் நடிக்கும்போது ரசிகர்களும் உருண்டுத்தான் போனார்கள்.

திருமணம் -குழந்தை
இந்நிலையில் காஜல் அகர்வால் கௌதம் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு நீல் கிச்சுலு என்ற ஆண்குழந்தை பிறந்தது. தமிழில் இவரது நடிப்பில் கடைசியாக ஹே சினாமிகா, கோமாளி போன்ற படங்கள் வெளியான நிலையில், அடுத்ததாக இவர் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தியன் 2 சூட்டிங்
காஜலுக்கு திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்த நிலையில், இவர் தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் நடிக்க மாட்டார் என்றே கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் இதை மறுத்த காஜல் அகர்வால் விரைவில் சூட்டிங்கில் இணையவுள்ளதாக தெரிவித்திருந்தார். அந்தவகையில் இன்றைய தினம் இவர் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து கிளம்பியுள்ளார்.

சென்னைக்கு பயணமான காஜல்
தற்போது ஆர்சி15 படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இதேபோல கமலும் மற்ற வேலைகளில் பிசியாக காணப்படும் நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங் சென்னையில் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காகத்தான் தற்போது சென்னை பயணத்தை துவக்கியுள்ளார் காஜல்.

ஸ்லிம் ஆன காஜல்
இதனிடையே மும்பை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த காஜல் அகர்வால், இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக சென்னை செல்வதாக தெரிவித்தார். குழந்தை பிறப்பிற்கு பிறகு கணிசமாக உடல் எடையை குறைத்துள்ள காஜல் அகர்வால் மிகவும் ஸ்லிம்மாக காட்சி அளிக்கிறார்.

ஏராளமான ரசிகர்கள்
காஜல் அகர்வாலுக்கு தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், இவர் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளது அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.