ஜம்மு: உலகின் மிக உயரமானதாக கருதப்படும் செனாப் ரயில்வே பாலம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி என்ற இடத்துக்கு இடையே செனாப் ஆற்றின் குறுக்கே 1,178 அடி உயரத்தில் ரயில்வே பாலம் கட்டுமான பணி கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த பாலத்தின் நீளம் 4,314 அடி. கடந்த 2017-ம் ஆண்டு அடித்தளம் அமைக்கும் பணி முடிவடைந்து வளைவுப் பகுதி கட்டுமானம் தொடங்கியது. இரும்பு மற்றும் கான்கிரீட் பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வளைவுப் பகுதி கட்டுமானம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. கிட்டத்தட்ட ரயில்வே பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்ததால், செனாப் ரயில்வே பாலம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
இதன் மூலம் முதல் முறையாககாஷ்மீரின் ஸ்ரீநகர் நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கப்படவுள்ளது.
இது குறித்து கொங்கன் ரயில்வே தலைவர் சஞ்சய் குப்தா கூறுகையில், “இந்தப் பாலம் கட்டுமானப் பணி மிக நீண்ட பயணம். இது உலகின் மிக உயர்ந்த ரயில்வே பாலம். கடின மலைப்பகுதி, மோசமான வானிலை என பல சவால்களை கடந்து இந்தப் பாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது” என்றார்.
ரயில்வே பாலம் வளைவின் முக்கிய பகுதியான ‘தங்கஇணைப்பு’ பணி முடிவடைந்துவிட்டதால், சுமார் 98 சதவீத பணிகளை நாங்கள் நிறைவு செய்துள்ளோம்” என இந்த பாலம் கட்டுமானத்தில் ஈடுபட்ட ஆஃப்கன்ஸ் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் கிரிதர் ராஜகோபாலன் தெரிவித்தார்.
அனைத்து பணிகளும் முடிந்தபின், இந்தப் பாலம், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நாட்டில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமானதாக இருக்கும். இந்த பாலத்தில் வரும் டிசம்பர் மாதம் ரயில் போக்குவரத்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.