சென்னை: இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி நடிப்பில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு வரும் செப்டம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது.
விரைவில் பிரம்மாண்டமாக வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் பலத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில், அந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ள மறக்குமா நெஞ்சம் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
ரஜினி, கமல் வராங்களா
நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசையை பிரம்மாண்டமாக நடத்த வேல்ஸ் நிறுவனம் பெரு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சிம்புவின் வெந்து தணிந்தது காடு
மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு ஹன்சிகாவின் 50வது படமான மஹா படத்தில் கேமியோவாக நடித்தார். ஆனால், அவரால் கூட அந்த படத்தை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில், சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் சிம்பு இணையும் 3வது படம் இது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மறக்குமா நெஞ்சம்
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து பாடிய இந்த மறக்குமா நெஞ்சம் பாடலுக்கு பாடலாசிரியர் தாமரை வரிகளை எழுதி உள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு அப்படியே இசைத் தேனை வாரி வழங்கி வருகிறது. சுமா 4 நிமிடம் 18 நொடிகள் இந்த பாடலின் நீளம் என கெளதம் மேனன் தனது ட்வீட்டிலேயே குறிப்பிட்டுள்ளார்.
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு
“நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு.. தேன தந்தா என்ன ஆகும்” என கவிஞர் தாமரை எழுதியுள்ள பாடல் வரிகள் கேட்ட மாத்திரத்திலேயே ரசிகர்களின் விருப்பமான வரிகளாக மாறி பலரும் அதனை ஷேர் செய்து வருகின்றனர். பாட்டு அப்படியே உருக வைப்பதாக சிம்பு ரசிகர்களும், இசைப்புயல் ரசிகர்களும் கமெண்ட் செக்ஷனில் பாராட்டி வருகின்றனர்.