தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதிப் பணிப்பாளர் கிறிஸ்டோப் பஹூட், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஆகஸ்ட் 12ஆந் திகதி சந்தித்தார்.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக மற்றும் குறிப்பாக கடினமான காலங்களில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலையான ஆதரவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பாராட்டினார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடருவதற்கு இலங்கை ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார். குறிப்பாக தற்போதைய சவால்களை சமாளிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட முன்னுரிமை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் தொடர்ச்சியான ஆதரவையும் ஒத்துழைப்பையும் பிரதி பிராந்தியப் பணிப்பாளர் பஹூட் உறுதிப்படுத்தினார்.
பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கான சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும், தற்போதைய சவால்களில் இருந்து நிலையான மீட்சியை உறுதி செய்வதற்கும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்குமான வழிகள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஆகஸ்ட் 14