சண்டிகர்: பஞ்சாப்பில் ஒரு எம்எல்ஏ, ஒரே பென்ஷன் திட்டத்தை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தி அரசாணை வெளியிட்டது. பஞ்சாப்பில் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு அமைந்த பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, அம்மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் எத்தனை முறை எம்எல்ஏ.க்களாகி இருந்தாலும், அவர்களுக்கு ஒரே ஒருமுறைக்கான பென்ஷன் மட்டுமே வழங்கப்படும் என முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார். இதற்கான சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 30ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இது குறித்து முதல்வர் பகவந்த் மான் தனது டிவிட்டரில், ‘ஒரு எம்எல்ஏ, ஒரே பென்ஷன் திட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்ததைத் தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,’ என கூறி உள்ளார். இதன் மூலம், பஞ்சாப் அரசுக்கு ஆண்டிற்கு ரூ.19.53 கோடி பணம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.