போபால்: ஆற்று வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் அடித்து செல்லப்பட்ட பிறகும், தனது 8 வயது மகனுக்காக வாழ்ந்தே தீர வேண்டும் வைராக்கியத்துடன் எமனின் பாசக்கயிறுடன் போராடிய பாசத்தாயை மீட்பு குழுவினர் மீட்டனர். மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தின் பதாரியாவை சேர்ந்தவர் சோனம். தனது பெற்றோர் வீட்டிற்கு ரக்ஷாபந்தன் விழாவை கொண்டுவதற்காக தனது சகோதரருடன் பைக்கில் சென்றார். மாலை 6 மணியளவில் பாரிகாட் மேம்பாலத்தை கடக்க முயன்றபோது பைக் சறுக்கியது. இதில், எதிர்பாராத விதமாக சோனம் ஆற்றில் தவறி விழுந்தார். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், வெகுதூரத்துக்கு சோனம் அடித்து செல்லப்பட்டார். மேம்பாலத்தில் இருந்து சுமார் 5 கிமீ அடித்து செல்லப்பட்ட சோனம், கஞ்ச் என்ற பகுதியில் கட்டுமான பணி நடந்து வரும் பாலத்தின் கீழ் ஒரு இரும்பு கம்பியை பிடித்துள்ளார். தான் இறந்து விட்டால் தனது 8 வயது மகனின் எதிர்காலம் என்னவாகும் என நினைத்தார். அவனுக்காக வாழ்த்தே தீர வேண்டும் என வைராக்கியம் கொண்டார். தைரியத்தை வரவழைத்து கொண்டு தொடர்ந்து கம்பியை பிடித்தபடியே ஆற்று நீருடன் போராடினார். மீட்பு குழுவினர் அதிகாலை 5 மணிக்கு சோனத்தை கண்டனர். அவரை மீட்டு திரும்பியபோது ஆற்றில் படகு கவிழ்ந்தது. ஆற்றில் விழுந்த மீட்பு குழுவினர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், சோனம் மீண்டும் அடித்து செல்லப்பட்டார். ஆனால், அவர் லைப் ஜாக்கெட் அணிந்திருந்தார். இதற்கு முறை ராஜ்கேடாவில் மரம் ஒன்றில் சிக்கி மீண்டும் உயிர் பிழைத்தார். பின்னர், சோனத்திடம் வந்த மீட்பு குழுவினர் கிராம மக்கள் உதவியோடு அவரை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவர்களுக்கு நன்றி கூறிய சோனம், தனது சகோதரருக்கு ராக்கி அணிவித்து மகிழ்ந்தார்.